13 Nov 2014

கார்த்திகை தீபம்



நீ அசைந்து பார்ப்பதை
அசையாமல் பார்க்கிறேன் நான்...

ஏற்றுவதையே தொழிலாகக் கொண்டதால்,
எரிவன குறித்த கவலை உனக்கில்லை...

என்னதான் நீ வெளிச்சமானவள் என்றாலும்,
நீ தலையெடுக்க,
ஒல்லிக்குச்சி உடம்புக்காரனொருவன்,
தன் தலையெரிக்க வேண்டியிருக்கிறது.

எண்ணெய் குடித்து நீ ஒளிரும் அழகில்,
என்னை இழக்கிறேன் நான்...

நிலம் நோக்கி எரிவதில்லை என்பதால்
நீ பெண்ணில்லை என்கிறான் நண்பன்.

விண் நோக்கி எரிவதால்
நிலம் பெற்ற நிலா நீ என்கிறேன் நான்.

இமை போலிருக்கிறாய்.
இடையுள்ளவள் போல்
இடம் வலம் அசைகிறாய்.
இரவல் ஒளி பெற்றவளே!
இரவினை வெறுக்கிறாய்...

சம்சாரம் போல் எம் குடி தாங்கும்
சௌபாக்யவதியே!
மின்சார வருகைக்குப் பிறகே
இருண்டு போனதடி எம் வாழ்க்கை!

'தீயினால் சுட்ட புண் உள்ளாறும்' என்றான் அய்யன்.
- இன்று தீபத்தில் தான்
எல்லோரும் ஆற்றுகிறோம்
எல்லாப் பணியும்!

ஏழைக்கு உணவளி அடுப்பில்.
எல்லோருக்கும் ஒளிகொடு படிப்பில்.