13 Nov 2014

விவசாயி

எந்த ஆட்சியானால் என்ன?

ஒரு போதும் உணரப்படுவதே இல்லை... விவசாயியின் வேதனையும், உண்மை வலியும்...

நானெல்லாம் சொந்த ஊர், பிறந்த மண்.... இங்கிருந்து விவசாயம் செய்து ஒரு படி நெல் கொண்டு சென்றாலும் பெருமை தான் என்றெண்ணி இறங்கி, வெறும் பதரை மட்டுமே பலமுறை பெற்றிருக்கிறோம்...

செய்த செலவை விட, எந்திரம் வைத்து வெற்று வைக்கோலையும், பதரையும் அள்ள கூலி கொடுத்து குறைந்த பட்சம் 15 ஆயிரமாவது நட்டமாவது வாடிக்கையாகிவிட்டது...

நான் தாங்கிக் கொள்ளலாம் தான்....
ஆற்றில் விடும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளை அடைந்து வயலை அடைவது அரிதாகிவிட்டது. இதை மட்டுமே நம்பி இருப்பவனை நினைத்தால் பயமாக இருக்கிறது.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கூட மின்சாரம் கிடைப்பதில்லை.. அப்புறம் எப்படி போர்செட் போடுவது? என்ன செய்ய? என்கிறார்கள்.
பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் வயலில், பசுமையான நெற்கதிர்கள் 'பால் பிடிக்கும்' தருவாயில் உள்ளது. அடித்த உரம் அப்படியே காய்ந்த தரையில் திப்பித் திப்பியாய் கிடக்கிறது.

'சோழ வள நாடு சோறுடைத்து' என்றும் ' தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை' என்றும் இனி மாணவர்கள் சொன்னாலோ, மேடையில் முழங்கினாலா கண்டிப்பாக அது மதிப்பெண்ணுக்கோ, பரிசுக்கோவாகத் தான் இருக்கும்.

அப்பாவி விவசாயிகளை நினைக்கையில் அழுகையாய் வருகிறது.

இதே மண்ணையாண்ட ராஜ ராஜ சோழன் தான், இங்கு ஓடி வரும் காவிரித் தண்ணீரை தடுத்து நிறுத்தி அணை கட்டிய கன்னட மன்னர்களை எதிர்த்து குதிரை மீதேறிப் படையுடன் திரண்டு போய் அங்கே அணையினை உடைத்தெறிந்து வந்ததாக வரலாறு கூறுகிறது.

என்றைக்கு இந்த விவசாயிகள் பிற அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக சேர்ந்து கொண்டு அதில் விவசாய அணியாக செல்படுவதை விடுத்து, தனியே ' தமிழக விவசாயிகள்' என்று ஒரே அணியில் நின்று குரல் கொடுக்கிறார்களோ, அன்றைக்கே விடிவுகாலம் வரும்....

அது வரைக்கும், வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் என்ற பேரில் வரிசையில் நின்று ஏக்கருக்கு 2 ஆயிரம் மூவாயிரம் என அரசுகள் கொடுக்கும் காசை வாங்கி, கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல், விழி பிதுங்கி, பரம்பரை பரம்பரையாய் சோறு போட்டு வந்த நிலத்தை விற்று, அவைகள் மனை நிலங்களாக தம் கண் முன்னே மாறுவதை கண்ணீர் வழியும் கண்களோடு பார்த்துக் கொண்டு, இயலாமை இதயம் நொறுக்க, வயிற்றுப் பிழைப்புக்காக அருகிலிருக்கும் நரகங்களுக்கு நகர்ந்து, தம் அப்பாவித்தனம், அறியாமையால் அங்கும் காலம் தள்ள முடியாமல் எங்கோ ஓரிடத்தில் புதைந்து அடையாளம் தொலைந்து போக வேண்டியது தான்...

நீங்கள் ஒவ்வொரு முறை சோறுண்ணும் போதும் தயவு செய்து அவர்களது தியாகத்துக்கு நன்றி செலுத்துங்கள்...

#இதைச் சொல்லும் என்னை மன்னியுங்கள்...

" ஏதோ ஒரு விவசாயக் குடும்பத்தின் கண்ணீரும் அந்த நெல்லில் அடங்கியிருக்கலாமல்லவா?"