29 May 2015

36 வயதினிலே



ரோஷன் அன்ட்ரீவ் இயக்கி கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ'வின் ரீ மேக்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோ மீண்டும் நடிக்கும் ஒரு படம். சூர்யாவினுடைய 2D Entertainment  நிறுவனம் தயாரிப்பது தான் என்றாலும், இதில் நடிப்பதாய் ஒப்புக் கொள்ள முழுதாக 2 நாட்கள் எடுத்துக் கொண்டாராம் ஜோ.

சென்னை,தில்லி,ராஜஸ்தான் பகுதிகளில் படமாக்கப்பட்ட '36 வயதினிலே', நடிகை அபிராமி 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் தமிழ்ப் படம் என்ற வகையிலும் இது சிறப்பு வாய்ந்தது.

அபிராமி கேரக்டர் தான் (சூசன் டேவிட்) சராசரி 'ஜோ' வை ஆழமாக சிந்திக்க வைத்து 2 ஆண்டுகளில் மீண்டும் நாடே போற்றும் நல்ல குடிமகளாக கொண்டு வந்து நம் கண் முன் நிறுத்துகிறது.

மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த பாத்திரத்தில் தமிழில் ஜோ (வ்சந்தி தமிழ்ச்செல்வன்) !

சன்டிவி சண்டே கலாட்டா, தேவதர்ஷினி (கிரிஜா), ஜோ வின் அலுவலக நண்பியாய் அவ்வப்போது வந்து ஆறுதல் சொல்கிறார்.

சிறிய ஆனால் வலுவான கதைக் கரு. பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது? அவர்களது கனவுகளை சிதைப்பது யார்? ஏன் அவர்களது சிறிய வயது கனவுகள் நிறைவேறவில்லை? ஏன் இந்திய ஜனாதிபதிகளிலும்,பிரதமர்களிலும்,முதலமைச்சர்களிலும் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே பெண்கள் உள்ளனர்? அவர்களில் திறமைசாலிகள் இல்லையா? அல்லது அனுமதி மறுக்கப்படுகிறதா?-என பல்வேறு கேள்விகளைக் கேட்டு, மகளிர் முன்னேற்றம் குறித்து சிந்திக்க வைத்திருக்கும் படம்.

கணவனும் தன் ஒரு பெண்குழந்தையும் அயர்லாந்துக்கு சென்றே ஆக வேண்டுமென பிடிவாதமாய் இருந்து சாதிக்க, தனி ஆளாய் இங்கேயே இருந்தாலும் ஒரு பெண்ணாய் எப்படி சாதிக்கிறாள் தமிழ்ச்செல்வி-என்பது தான் கதை.

காய்கறி விலை விஷம் போல் ஏறும் அதே சமயம், விஷமாயும் மாறி வரும் விஷயத்தை சமூக அக்கறையோடு சொல்லி, அதன் வாயிலாக எளிமையான வருமானத்திற்கும் வழி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இந்திய ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ள முடியாத விரக்தி. வார்த்தைகளால் அவ்வப்போது குத்திக் கிழிக்கும் சுயநலக் கணவன்.அம்மாவான தன்னை புரிந்துகொள்ளாமல் எடுத்தெறிந்து பேசும் பதின் வயதிலிருக்கும் மகள். அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்து கூடவே இருந்து பராமரிக்க வேண்டுமென தாயாய் தவிப்பு. அலுவல்கத்தில் ஒரு சராசரி அரசு ஊழியராக சலிக்கும் பணி.கூடவே டெல்லி கணேஷுக்கும்,அவரது டிவி சீரியல் பைத்திய மனைவிக்கும் நல்ல (மரு)மகளாக.-இப்படி எல்லா இடங்களிலும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ஜோ.

"There is no expiry date for a woman’s dream", "Your dream is your signature"-இவ்விரண்டும் இப்படத்தில் முக்கியமான,அழுத்தமான வசனங்கள்.

ஒவ்வொரு பெண்ணும் (ஆணும் தான்) பூமியில் பிறக்கையில் பல்வேறு விதமான கனவுகளோடு பிறக்கிறார்கள். அந்தக் கனவுகளோடு நடைபோடுகிறார்கள்,வளர்கிறார்கள்,ஆளாகிறார்கள்.

ஆனால், அக்கனவுகள் கால் தடுக்கியோ,கல் தடுக்கியோ கல்யாணம் என்ற சம்பிரதாயத்திற்குள் விழுந்து 99% பெண்களுக்கு முடிந்து போகிறது.

தன் கணவன்,குடும்பம்,குழந்தைகள் அவர்களது வளர்ப்பு,முன்னேற்றம் -என அப்படியே தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள்.

வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எந்த அளவு நிஜமோ அது போல,

தன் கனவுகளை பொசுக்கிக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் எதோ உறவாய்(!?!) ஒரு ஆண் மகன் இருப்பான்.

-'36 வயதினிலே'-எல்லா ஆண்களுக்குமான பாடமாகவும், பெண்களின் மனம் மற்றும் சூழலை சித்தரிக்கும் படமாகவும் திகழ்கிறது.