17 May 2015

ஜான் கீட்ஸ் எனும் கவிஞன்



ஜான் கீட்ஸினுடைய ஆங்கிலக் கவிதைகளை எல்லோரும் சிலாகித்துப் பேசுவது ஒன்றும் வியக்கத்தக்கதல்ல..

ஆனால் கீட்ஸ் எனும் சாமானியனின் சொந்த வாழ்க்கை அவனுக்குக் கற்றுத் தந்திருந்த படிப்பினைகளே, அவனை பெரும் கவிஞனாக்கியது என உறுதியாகக் கூறலாம்.

எட்டு வயதாகி இருக்கும் போது குதிரை மீதேறிச் சென்ற தந்தை கீழே விழுந்து மண்டை உடைந்து செத்துப் போனது முதல் அவன் கண்ட அதிர்வலைகள் ஏராளம்.

அம்மா இன்னொரு திருமணம் செய்து கொள்கிறாள். இரண்டு,மூன்று மாதங்களில் கணவனைப் பிரிகிறாள்.

கீட்ஸுக்கு 14 வயது இருக்கும் போது அம்மா டிபியால் இறந்து போகிறார்.
பாட்டியிடம் வளர ஆரம்பித்து, பாட்டியால் நியமிக்கப்பட்ட காப்பாளரிடம் வளர ஆரம்பிக்கிறார்.

அறுவை சிகிச்சை நிபுணரிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றுகிறார். பின்னர் மருத்துவ மாணவராகவும் சேர்கிறார்.

கடனும்,காசும்  இவரது வாழ்வையும் சுழற்றி அடித்திருக்கிறது.

மருத்துவம் பார்ப்பதற்கான உரிமம் கிடைத்த பின், ஒரு பெரும் தடுமாற்றத்திற்குப் பின், தான் ஒரு கவிஞனாகவே தொடர விரும்புவதாக தனது காப்பாளரிடம் தெரிவித்துவிட்டார்.

அதன் பின் தான்,

"Ode to Psyche" எழுதுகிறார்.

இதில் Psyche பெண் கடவுளிடம், அவளது ரகசியங்களை அவளிடமே பாடுவதற்காக மன்னிப்புக் கோருகிறார்.

காடுகளில் தான் அலைந்து திரியும்போது கடந்து வந்தன குறித்துப் பாடுகிறார்.
அதன் பிறகு ப்ரவுன் வீட்டிற்குச் சென்றிருந்த போது,

அவள் வீட்டுத் தோட்டத்தில் நைட்டிங்கேல் கூவும் இனிமை கண்டு, டைனிங் டேபிளுக்கு அருகிலிருந்த நாற்காலியை தூக்கிக் கொண்டு போய் ப்ளம் மரத்தடியில் புற்களின் மீது போட்டு, எழுதிய வரிகள் தான்,

My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk,
Or emptied some dull opiate to the drains
One minute past, and Lethe-wards had sunk:
’Tis not through envy of thy happy lot,
But being too happy in thine happiness,—
That thou, light-winged Dryad of the trees,
In some melodious plot
Of beechen green, and shadows numberless,
Singest of summer in full-throated ease.

இளையராஜாவின் இசையில் வெளிவந்த பெரும்பாலான குயில் பாடல்களில் இந்தக் கவிதையின் தாக்கமிருக்கும்.

இவரது "Ode on a Grecian Urn" பண்டைய கிரேக்கப் பானை அல்லது கோப்பையைக் கண்டு அதில் இவர் கண்ட ஓவியங்கள் குறித்தானது.

ஒரு மரத்தடியில் காதலன், தன் காதலியின் மடியின் மீது தலைசாய்த்து குழல் (pipe) வாசித்துக் கொண்டிருக்கிற காட்சி இவரை சிலிர்க்க வைக்கிறது.

கேட்கப்படாத இனிமையான இசை, உலகில் நாம் கேட்கும் இசையை விட இனிமையானது ஏனென்றால் அவை காலத்தால் அழிக்கப்பட முடியாதவை என்கிறார்.
(“unheard” melodies are sweeter than mortal melodies because they are unaffected by time.)

ஓவியத்தில், காதலன், காதலியை முத்தமிடவில்லையே என கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவளது அழகு என்றும் மறையாதது என்கிறார்.

இப்படியாகக் கழிந்த கீட்ஸின் வாழ்க்கையிலும் ஒருத்தி நுழைகிறாள்.

அவள் தான் Frances (Fanny) Brawne.

கீட்ஸ் குடும்பத்தைப் போன்றே, இவளது குடும்பத்திலும் நிறைய பேர் டிபியால் இறந்து போயிருந்தார்கள்.

இருவரும் தமிழ்த் திரைப்பட காதல் ஜோடிகளைப் போல, புத்தகங்களையும், கடிதங்களையும் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தனர்.

"Bright Star" -என்ற கவிதையொன்றை அவளுக்காகவே எழுதிக் கொடுக்கிறான் கீட்ஸ்..
( கீட்ஸினுடைய கடைசி மூன்றாண்டு கால காதல் பயணத்தை கருவாகக் கொண்டு இது படமாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.)

பின்னர் தன் சகோதரனுக்கு வந்த டிபி தனக்கும் வர, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், சாதகமான கால நிலை உள்ள இடத்திற்கு தன் காதலியைப் பிரிந்து செல்கிறான் கீட்ஸ்.

"என் வாழ்க்கைப் பயணத்தில் நான் இரண்டு சுகங்கள் குறித்து ஆழமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒன்று உன் காதல், இரண்டு என் முடிவுக்கான நேரம்"-என் கீட்ஸ் தன் காதலிக்கான கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறான்.

"என் வாழ்க்கையை நீ முற்றிலுமாக ஆக்கிரமித்துவிட்டாய். நீ இன்றி என்னால் வாழ முடியாது. உன்னைத் தாண்டி என்னால் எதையும் செய்யவோ,நினைக்கவோ இயலாது.

என் காதல், என்னை சுயநலவாதியாக்கிவிட்டது. தம் மதத்திற்காக பலர் உயிர் துறப்பதைக் கண்டு நான் அதிசயித்திருக்கிறேன்.
இப்போது நானும் உயிர் துறக்க உள்ளேன். காதலே என் மதம். அதற்காகவும்,உனக்காகவும் சாகிறேன்" - என அவளுக்கு எழுதிய நூற்றுக் கணக்கான கடிதங்களுள் ஒன்றில் குறிப்பிடுகிறான்.


ஆறு ஆண்டுகளே கவிதைகள் எழுதி, வெறும் 25 ஆண்டுகளே இப் பூமியில் வாழ்ந்துவிட்டு, தன் கவிதைகளால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜான் கீட்ஸின், தன்னம்பிக்கை வியப்புக்குரியது.