24 May 2015

டிமான்ட்டி காலனி


இன்னமும் உயிர்ப்போடு நம்முடனே உலவக் கூடிய ஒன்று தான் பேய்கள் குறித்தான தகவல்கள். 
அதை காதலோடோ அல்லது ஒரு காபி குடித்தலோடோ நம் சுவராஸ்ய அளவிற்காக ஒப்பிடலாம்.

பேய்கள் தலை முடியை விரித்துப் போட்டிருக்கும். வெள்ளை ஆடையணிந்திருக்கும்.கால்கள் தரையில் பதியாது போன்ற விவரங்கள் என் பாட்டியின் பாட்டியுடைய சுருக்குப் பை பழசானவை.

எனது முதல் பேய்பட அனுபவம் ‘மைடியர் லிசா’. 
பேபியின் இயக்கத்தில் 1987 இல் வெளிவந்தது.
அதன் பிறகு ஏனோ அதில் நடித்திருந்த நிழல்கள் ரவியை பிடிக்காமல் போனது.

சமீபத்தில் பார்த்து வியந்த தமிழ் பேய்ப்படங்கள் பீட்சா1 & 2.  
இப்போது டிமாண்டி காலனி.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இப்போதும் இருக்கும் டிமான்டி காலனி வீட்டை, நல்ல வெயில் நேரத்தில் ஆயிரம் பேர் துணையோடு அதிலும் குறிப்பாக மந்திரவாதிகளோடு சென்று காணும் ஆவலை எனக்கு ஏற்படுத்தியுள்ளது இப்படம்.

சென்னைவாசிகளின் ‘டாப்-10’ பயப் பகுதிகளில், டிமான்டி காலனிக்கே இன்றும் சிறப்பிடமாம்.

‘டிமான்டி காலனி’ படத்திற்கு வருவோம்.

அப்பாவின் தயாரிப்பில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்துள்ள படம். 
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த அஜய் ஞானமுத்து தான் இயக்குனர்.

 மழையோடான  இரவில், நான்கு நண்பர்கள் குடித்துவிட்டு டிமான்டி காலனியிலிருக்கும் ‘பேய் பங்களா’ ஒன்றிற்குள் த்ரில் அனுபவத்திற்காக செல்வதால் ஏற்படும் ‘பேய் விளைவுகளே’ கதை.

இசையமைப்பாளருக்கு செம்ம்ம ஸ்கோர் செய்ய வைக்கும் களம். 
கெபா ஜெரமியா மிரட்டியிருக்கிறார். 
பின்னணி இசையினூடே சிலரை காட்டு மிராண்டித் தனமாக கத்தவிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

அரவிந்த் சிங்கின் கேமரா, சென்னையை குறிப்பாக கடற்கரை குடியிருப்புகளை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறது.

இருட்டில் டிமாண்டி பங்களாவை, சிகரெட் லைட்டர் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் காட்டும் போது திடுக்கிட வைக்கிறார். நண்பர்களின் அறைக்குள் காட்சியமைப்புகள் அட்டகாசம்.
‘உச்சா’ போக நண்பர்கள் ஒன்றாய் கைகோர்த்து நிற்கும் காட்சி, திகில் சிரிப்பு.

புவன் சீனிவாசனின் எடிட்டிங் ‘கத்தரி தப்பினால் மரணம்’ என்ற வகையில் கதையை கோர்வையாக்கியிருக்கிறது. டிவியில் நண்பர்கள் சாகப் போகும் காட்சிகள் வருவதும்,அவை அடுக்கடுக்காக நடந்தேறும் விறுவிறுப்பும் காட்டப்படுவதில், ‘ரீப்ளே’ உத்திகள் நம் குழப்பங்களுக்கு விடையளிக்கவே.

‘ஜில்லு’ கேரக்டர் திணிக்கப்பட்டுள்ளது. அது, அருள்நிதி பாத்திரத்தின் மீதான ஒழுக்கத்தை சந்தேகம் கொள்ள வைக்கிறது.

ரஜினி,அஜித்,விஜய் வசனங்களை படத்தின் முற்பாதியில் ரசிகர்களை ஈர்க்கவும்,நேரத்தை கடத்தவும் ஆங்காங்கே தெளித்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, படம் ஆரம்பித்து அரை மணி நேரம் போன பிறகு, ‘பட,படா,தட,தடா, திடுக்’-திரில் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இரவு நேரக் காட்சியை தனியே சென்று கண்டு வீடு திரும்பினால், ஆயிரம் ஓவா பரிசு தருவதாக, கார்த்தி  உள்ளிட்ட நண்பர்களிடம் தைரியமாகத் தெரிவித்துவிட்டேன்.


நீங்களும் போயிட்டு வந்து சொல்லுங்க…