25 May 2015

அரசுப் பள்ளிகளை வாழ்த்த வேண்டிய தருணமிது



வெளிவந்திருக்கிற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் நம் முன் பல ஆச்சர்யங்களையும், சில வினாக்களையும், சந்தேகங்களையும் முன் வைக்கின்றன.

ஒரு தமிழ் நாளேடு

மதிப்பெண் பேரலையில் கரையேறிய அரசு பள்ளியின் 19 மாணவ, மாணவியர்” – என அரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கிற மாணாக்கர்களை தலைப்பிட்டு எழுதியுள்ளது.

அம் மாணவர்களை அது வாழ்த்துகிறதா? கேலி செய்கிறதா என்று புரியவில்லை

மேலும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 3.36 சதவீதம் கடந்த ஆண்டைக் காட்டிலும்  உயர்ந்திருந்தாலும், அதே 15 ஆம் இட த்திலேயே நீடிப்பதாக குறிப்பிடுகிறது

கூடவே 89% அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி என குறிப்பிடுவதை விடுத்து,

 ‘அரசுப் பள்ளிகளில் பயின்ற 11% மாணவர்கள் பெயில்’-என தலைப்பிடுகிறது.

இன்னும் சில ஊடகங்கள், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கிற அரசுப் பள்ளி மாணவர்களை புகைப்படத்துடன் செய்தியாக வெளியிடும் போது கூட

தனியார் பள்ளி மாணவர்களை முன்னிலைப்படுத்திவிட்டே அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை அட்டவணைப் படுத்துகின்றனர்.

இக் குரூர தாக்குதல் எவ்வகையின் கீழ் வருமெனத் தெரியவில்லை.

தனியார் பள்ளிகள் மட்டுமே சிறந்த மதிப்பெண்கள் எடுத்தால் அது நல்ல தேர்வாகவும், சிறந்த மதிப்பீட்டு முறையாகவும் சொல்லப்படும்

அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்தால் அத்தேர்வு அர்த்தமற்றதாகவும்மதிப்பெண் பேரலையாகவும்பார்க்கப்படும்.

2012ல், 358; 
2013ல் 453; 
2014ல், 558 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

தற்போது, 1,164 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 
இது, கடந்த ஆண்டை விட, 606 பள்ளிகள் அதிகமாகும்.

ஜெய்பிரகாஷ் காந்தி என்ற கல்வியாளர் குறிப்பிடுகையில், 
“15 ஆண்டுகளுக்கு முன், 400 மதிப்பெண் என்பது, சரித்திரமாக இருந்தது; இப்போது, 499, 500 மதிப்பெண் எல்லாம் எடுக்கின்றனர். 

மாநிலத்தில், முதல் மூன்று இடங்களை பிடித்தோர் எண்ணிக்கை, 700க்கு மேல் போகிறது; அடுத்தடுத்த ஆண்டுகளில், 2,000 ஆக உயரும்.இது, சரியான அறிகுறி அல்ல. 

அகில இந்திய நுழைவுத்தேர்வுகளில், நாம், 29வது இடத்தில் இருக்கிறோம்; இன்னும் பின்னடைவு ஏற்படும். 

புள்ளிவிவரங்கள் பார்க்கவும், கேட்கவும் நன்றாக உள்ளது. உண்மையில், மாணவர்களின் திறன் சார்ந்தாக இல்லை.” – என அதிர்ச்சி அடைகிறார். 

மேலும், மதிப்பெண் குவிந்ததற்கு, வினாத்தாள் மிக எளிமையாக தயாரிக்கப்பட்டதே காரணம் என்கிறார்.

அடிப்படையில் தேர்ச்சி சதவீதமும் மதிப்பெண்களும் உயர்ந்தது போன்று தெரிவதற்கு காரணம் சமச்சீர் கல்வி முறையே என்பதை இவர் போன்றோர் சுலபமாக மறந்துவிட்டனர்.

அதாவது இக்கல்வி முறைக்கு முன்பு, மெட்ரிக்,ஆங்கிலோ இந்தியன்,ஓரியண்டல் உள்ளிட்ட தனித்தனியான பாட முறைகள் பின்பற்றப்பட்டன. 

இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே பாடப் புத்தகங்கள்,வினாத்தாட்கள், மதிப்பீட்டு முறைகள். எனவே தேர்ச்சி விழுக்காடும் தனித்தனியே காட்டப்பட்டு வந்தன.

இப்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான பாட திட்டம்,வினாத்தாள்,தேர்வு முறை மற்றும் மதிப்பீட்டு முறை. எனவே தேர்ச்சி முடிவுகளும் ஒன்றாகவே அறிவிக்கப்படும். 

எனவே தேர்ச்சி சதவீதமும்,மதிப்பெண்களும் அதிகமாகத் தானே தெரியும்? 
இந்தக் காரணம் இவர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

தனித்தனியான பாட முறைகளின் படி, 100 பேருக்கு 10 பேர் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால்,பெரிதாகத் தோன்றாது. 

ஒரே பாட முறையின் கீழ் 1000 பேர் எழுதி, 100 பேர் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அது எப்படி வினோதமாகப் பார்க்கப்படுகிறது என்று தோன்றவில்லை.

பாடப் புத்தகங்களின் தரம் குறைந்து போய் இருப்பதால்தான் மதிப்பெண்கள் அதிகரித்திருக்கிறது என்ற கூற்று கேலிக்கூத்தான ஒன்று.

தேசிய கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி, மாநில கல்வி அமைப்பு பலதரப்பட்ட பாட நிபுணர்கள் மற்றும் கல்வி உளவியலார்களிடம் கலந்தாலோசித்து அவர்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், 

பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களின் பார்வைக்கும் சுற்றுக்கும் வரைவு பாட திட்டத்தை இணைய வாயிலாக கூட பரிந்துரைகளுக்காகவும்,மேம்பாட்டிற்காகவும்  விட்டிருந்தது. 

அதனடிப்படையில் பெறப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொண்டு தான் பாடப் புத்தகங்கள் தயாராகின. 

இப்போது இப்பாடப் புத்தகங்களைக் குறை கூறுவோர், அப்போது எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை.

இது போன்று அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து வெற்றுக் கூப்பாடு போடுவோர், அப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் குறித்து கவலை கொண்டு,ஆக்கபூர்வமான யோசனைகளை உரிய வழியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால், அடித்தட்டு மாணவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்.


எல்லாவற்றுக்கும் மேலாக, இது அரசுப் பள்ளி மாணவர்களின் வெற்றிக்காகவும், அவர்களுக்காக அயராது பாடுபட்ட ஆசிரியர்களுக்காவும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய நேரம். 
வசைபாடும் நேரமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.

தூற்றுவார் தூற்றட்டும். நீங்கள் உங்களது பணியை தொடர்ந்து செவ்வனே செய்யுங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களே!

தனியாரின் கல்விக் கொள்ளைக்கு துணை போகும் கூட்டம் 'மண் கவ்வப் போகும் நாள்' வெகு தொலைவில் இல்லை.