25 May 2015

தபால்காரர்



புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமசுக்கெல்லாம் செல்போன் கம்பெனிக்காரர்கள் நம் நாட்டுக்குள் டவரடி எடுத்து வைக்கும் வரை வாழ்த்து அட்டைகள் அனுப்பிக் கொண்டு தான் இருந்தோம்.

அது 15 பைசா தபால் அட்டையில் இருந்து 15 ரூபாய் வசதி படைத்தவர்களுக்கான அட்டை வரை,வகை வகையாயிருக்கும்.

இவர்கள் உட்புகுந்து மக்களை சோம்பேறிகளாக்கி, முடமாக்கி, தபால் நிலையங்களுக்கெல்லாம் செல்லவே விடாமல் செய்துவிட்டனர்.

நண்பனாக, தந்தையாக,தாயாக, காதலியாக- அவரவருக்கு உற்ற வகையில் இரண்டு தெருவுக்கு ஒன்றாய் தொங்கிய சிகப்பு தபால் பெட்டிகள், அப்போது காட்சியளித்தன.

எழுத்தாளர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் என் கல்லூரிப் பருவத்தில் கடிதங்கள் எழுதியதுண்டு.

சிலர் பதில் அட்டைகள் போடுவார்கள். 'பேனா நட்பு' என்றொரு வட்டமும் தபால் கார்டுகள் வழியாக இயங்கி வந்தது.

வேண்டாதவனுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகளில் போதிய வில்லைகள் ஒட்டாமல் அனுப்பியதும், பெற்றதும் பள்ளி நாட்களில் மறக்க முடியாதவை.

அப்படியெல்லாம் பெறப்பட்ட வாழ்த்து அட்டைகள் 5 ஆண்டுகள் வரை கூட பொக்கிஷமாய் பாதுகாக்கப் பட்டு வந்தன.

தபால்காரர் சைக்கிளில் வந்து மணியடித்து அழைக்கும் அழகு சொல்லி மாளாது.

காக்கியிலிருந்து நீல நிறத்திற்கு அவர்கள் சீருடை மாறிய கால கட்டம் முக்கியமானது.ஏனெனில் அதன் பின்னர் அவர்கள் சரிவை சந்திக்க நிர்பந்திக்கப்பட்டார்கள்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மீசை வைத்து, ஒல்லியாய் வந்த தபால்காரர், மற்றொருவர்- இருவரும் எங்கள் தெருவில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்ப உறுப்பினர்கள் ஆகிப் போனார்கள்.

வெயிலில் களைப்பாய் வரும் அவருக்காகவே ஜூஸ் போடும் போது அவருக்காகவும் ஒரு தம்ப்ளரில் எடுத்து வைப்பதுண்டு.

தீபாவளிக்குப் பிறகு வரும் நாளில் அவர்களை வீட்டுக்குள் அழைத்து பலகாரங்கள் பரிமாறி அனுப்புவதும், பொங்கலுக்குப் பிறகு கரும்பு, வாழைப் பழங்களை கொடுத்து அனுப்புவதும் பேரானந்தம் தரும்.

செல்போன்களின் வருகைக்குப் பிறகு இவர்கள் பலருக்கு அன்னியர்களாகிப் போனார்கள்.

பெரிய பணமுதலை நெட் வொர்க் கம்பெனிகள், தாராளத்திலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதை மெல்ல மெல்ல தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டன.

அளந்து அளந்து அதிகபட்சம் இத்தனை எழுத்துக்கள் தான் என கண்டிப்பு காட்டின.
பின்னர் பூஸ்டர் ப்ளான், காம்ப்ளான் ப்ளான் என குழப்பியடித்தன.

கடைசியாக இப்போது மக்கள் நல்ல மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஒவ்வொரு தினத்திலும், அதற்கு முன்பு ஒரு நாளும் மெசேஜ் அனுப்பவே கூடாது என்ற முடிவோடு கட்டணங்களை கடுமையாக்கிவிட்டன.

இதென்ன நியாயம் எனப் புரியவில்லை. உண்மையிலேயே இவர்கள் தங்களது வாடிகையாளர்கள், தங்களுக்கு ஆயுள் முழுதும் வருமானம் ஈட்ட வாய்ப்பு கொடுப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அல்லவா இருக்க வேண்டும்?

அதைவிடுத்து வாழ்த்துக்கள் அனுப்பப்படுவதை தடை செய்யும் நோக்கில் இவர்கள் கட்டணங்களை மக்களுக்கு விதிப்பதால், இவர்களது குரூர புத்திதானே வெளிப்படுகிறது?

வாடிக்கையாளர்கள் இல்லையென்றால், இவர்கள் இல்லை என்ற எண்ணம் இவர்களுக்கு வராமல் போனதேன்?

எப்படியும் இவர்கள் நம்மிடம் வந்துதானே ஆக வேண்டுமென்ற ஆணவம் தானே காரணம்?

இவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காகவே மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் 1 நிமிடம் மட்டும் அவர்களது இணையம் மற்றும் செல்போன் சேவையை ஸ்விட்ச் ஆஃப் செய்து புறக்கணித்தால் என்ன ஆகும் என்பதை இவர்கள் அறிவார்களா?

நம் பாசக்கார தபால்காரகள் எங்கே போனார்கள்?
எங்கே வாழ்த்து அட்டை விற்பனையாளர்கள்?

மன்னித்துவிடுங்கள் நீங்கள் தொலைய காரணம் நாங்களில்லை.
-காலம்