25 May 2015

முறிந்த சிறகுகள் (The Broken Wings) - கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)



ஜிப்ரான் ஒரு பெரிய தத்துவ மேதை.

லெபனானிலுள்ள பெய்ரெட்டில் ஜிப்ரான் தனது முதல் மற்றும் கடைசி காதலியான செல்மா கெரமியை சந்திக்கிறான்.

கண்டதும் காதல் வகைதான் இதுவும்.

வாழ்வினைப் போன்ற உயிர்ப்போடும், பெருங்கடலின் ஆழம் போன்றும், நிசப்தமாக நிற்கும் குளம் போன்றும் பெய்ரட்டின் பேரழகியாக திகழ்ந்தாள் செல்மா.

அப்போது ஜிப்ரானின் வயது 18 தான்.
ஆனால், 23 வயதில் முடிந்து போனது செல்மாவுடனான அவனது காதல்.

ஜிப்ரான் ஒரு முறை லெபனானுக்கு சென்றிருந்தபோது எதேச்சையாக, தனது தந்தையின் நெடுநாளைய நண்பரான ஃபேரிஸ்ஸை சந்திக்கிறாரன்.

வயதான ஃபேரிஸ் மிகவும் அன்பாகவும்,கனிவாகவும் இருக்கிறார்.அவர் தனது மனைவியை இழந்துவிட்டு மகளோடு வசிக்கிறார். தனது வீட்டிற்கு ஜிப்ரானை வருமாறு அழைக்கிறார்.

ஜிப்ரான் ஒரு மாலை நேரத்தில் ஃபேரிஸின் வீட்டிற்கு செல்கிறான். அங்கே ஃபேரிஸின் மகளான செல்மா கெரமியை சந்திக்கிறான்.

அவளைக் கண்டதும் காதல் கொள்கிறார். ஃபேரிஸ் பெரும் பணக்காரர். ஜிப்ரானிடம் அவரது தந்தையுடனான தனது நட்பு குறித்தும்,பழைய நினைவுகள் குறித்தும் பேசிப் பேசி பிரகாசமடைகிறார்.

தனது தந்தையைப் போன்றே செல்மாவும் அன்பானவளாகவும், கனிவானவளாகவும் இருக்கிறாள்.

அங்கே சாத்தான்களாக, பிஷப் கேலிப்பும், அவனது சகோதரியின் மகனான மன்சூரும் உள்ளூரையே ஆட்டிப் படைக்கிறார்கள்.

மன்சூரின் அடாவடித்தனம் கணக்கிலடங்காதது. மது,மாது உள்ளிட்ட எல்லா சமுதாயத்திற்கு எதிரான தீங்குகளிலும் முதலிடம் இவனுக்கே.

இவனது கண்ணில் செல்மா கெரமி விழுந்துவிடுகிறாள். செல்மாவை விட, செல்மாவின் சொத்தே அவர்களுக்குப் பெரிதாகப்பட்டது.

அவளைத் திருமணம் செய்துகொண்டால், செல்மாவின் தந்தைக்குப் பிறகு எல்லா சொத்தும் தங்களுக்கே வந்துவிடும் என்பதால், மன்சூருக்கு, செல்மாவை மணம் முடிக்க வேண்டுமென பிஷப்பும் முடிவெடுக்கிறார்.

ஒரு மாலை வேளையில், செல்மாவின் வீட்டில் ஜிப்ரான் அமர்ந்து அவளது தந்தையோடு பேசிக் கொண்டிருக்கிற போது, பிஷப்பினுடைய ஆட்கள் செல்மாவின் தந்தையை பிஷப், ஒரு முக்கியமான விஷயமாக பேச அழைப்பதாக, கூப்பிட்டுச் செல்கிறார்கள்.

செல்மாவின் தந்தை, ஜிப்ரானிடம், செல்மாவை திரும்ப வரும் வரை பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் செல்கிறார்.

செல்மாவும்,ஜிப்ரானும் தோட்டத்தில் தனியே அமர்ந்திருக்கின்றனர். இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் ஜிப்ரான் மன்சூரால் செல்மாவுக்கும், அவளது தந்தைக்கும் ஏதோ சங்கடம் நிகழப் போகிறது என்பதை யூகித்துவிட்டார்.

செல்மாவின் தந்தை திரும்பி வந்ததும், மன்சூர், செல்மாவை அவனுக்கு திருமணம் முடித்து வைக்க கட்டாயப்படுத்துவதை கூறி புலம்புகிறார்.
அவனது மோசமான நடத்தைகளைத் தெரிந்தும் தனது மகளை வேறு வழியின்றி மன்சூருக்கு மணம் முடித்து வைக்கிறார்கள்.

ஆனால் யாருமே நிம்மதியாக இல்லை.

ஒரு நாள், தனியாக வசிக்கும் செல்மாவின் தந்தையை பார்த்துவிட்டு வரலாமென ஜிப்ரான் அவரது வீட்டிற்கு செல்கிறான். அங்கே செல்மாவும் விரக்தியோடு தன் அறையில் இருப்பதைக் காண்கிறான்.

செல்மாவின் தந்தை, செல்மாவுக்கு அவளது அம்மாவின் புகைப்படத்தைக் காட்டுகிறார். தான், 3 வயது இருக்கிறபோது இறந்து போன தனது தாயின் படத்தைக் கண்டு செல்மா கதறியழுகிறாள்.

நிறைய அறிவுரைகளை அவளுக்குச் சொல்லி, செல்மாவுக்கு தைரியமூட்டும் படி, ஜிப்ரானை வேண்டிவிட்டு அவர் இறந்து போகிறார்.

செல்மா குடும்பத்தின் சொத்திற்கு ஆசைப்பட்டுத் தானே பிஷப்பும், மன்சூரும் செல்மாவுக்குத் திருமணம் செய்ததே.

எல்லா செல்வமும் மன்சூரை வந்தடைந்தது என்றாலும் குழந்தை பாக்கியமில்லை.

வாரிசு இல்லாததால் மலடிப் பட்டம் கட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளை அனுபவிக்கிறாள் செல்மா.

திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்கிறாள்.
அவ்வப்போது கோவிலுக்குச் சென்று கடவுளிடம் முறையிடுவாள். அந்த நேரங்களில் ஜிப்ரான் செல்மாவை சந்தித்து ஆறுதல் கூறுவது உண்டு.

ஒருமுறை இனி இருவரும் சந்தித்துக் கொள்ளமுடியாது எனவும், இதுவே கடைசி சந்திப்பாக இருக்குமெனவும் செல்மா, ஜிப்ரானிடம் சொல்கிறாள்.

மன்சூர் மற்றும் பிஷப்பினுடைய பிடியிலிருந்து அப்போதே தப்பித்து கடல் மார்க்கமாக படகில் வேறொரு இடத்திற்குச் புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கலாமென ஜிப்ரான் அழைக்கிறான்.

செல்மா அன்போடு மறுத்து, “ஒற்றைச் சிறகொடிந்த பறவையால் நீண்ட தூரம் பறக்க முடியாது” –எனக் கூறிவிடுகிறாள்.

சூட்டப்பட்ட முட்கிரீடத்தோடே வாழ்ந்து முடிக்க தன்னை அனுமதிக்குமாறு வேண்டி, இனி தன்னை சந்திக்க முயற்சிக்க வேண்டாமெனவும் மன்றாடிப் பிரிகிறாள்.

அவளது நேர்மையைக் கண்டு நெகிழ்ந்து போகிறான் ஜிப்ரான்.
அதுவே அவர்களது கண்களின் கடைசி சந்திப்பாயிற்று.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் செல்மா.

அக்குழந்தையும் பிறந்த உடனே இறந்து விடுகிறது. தன்னை இக்கொடுமையான உலகிலிருந்து அழைத்துச் செல்ல வந்தவன் அவன் எனக் கூறி, இறந்த குழந்தையைக் கட்டியணைத்தவாறு, செல்மாவும் இறந்து போகிறாள்.

ஒரே சவப்பெட்டியில் இருவரும் வைக்கப்பட்டு புதைக்கப்படுகின்றனர்.

ஜிப்ரான் கல்லறைத் தோட்டத்து ஊழியனிடம் கேட்கிறான்:

“செல்மாவின் தந்தையை புதைத்த இட த்தை எனக்குக் காட்ட முடியுமா?”

“அங்கேயே தான் புதைத்தேன்.
முதலில் செல்மாவின் தந்தை. இப்போது அதற்கு மேலேயே செல்மா. செல்மாவிற்கு மேல், அவள் மார்பைக் கட்டியணைத்தவாறு, அவளது குழந்தை”

-என்று கூறுகிறான் அவன்.

ஜிப்ரான் கூறுகிறான்:

“ நீ என் இதயத்தையும் வெட்டி இங்கே தான் புதைத்துவிட்டாய்” –என்று.

காலம் கடந்து அவர்கள் காதல் இன்னமும் நிற்பதற்கு காரணம் எதுவும் சொல்ல வேண்டுமா என்ன?