25 May 2015

CCE- என்றால் என்ன? -1


தார்ச் சாலை போடப்பட்ட பின்னர்,டெலிபோன் கேபிள் பதியவும், பாதாள சாக்கடை அமைக்கவும், குடி நீர் இணைப்பு வழங்கவும் தனித்தனியே ஒரே சமயத்திலோ அல்லது சற்றே இடைவெளி விட்டோ தோண்டப்படும் பள்ளங்கள்.


அதை நினைவூட்டுவது போன்று இருக்கின்றன, ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் CCE சார்ந்த பயிற்சிகள்.

ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் குறைந்தபட்சம் 5 பேரை இரு வேறு இடங்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சிக்கென அனுப்பிவிட்டால், மாணவர்களை கவனிப்பது யார்? வகுப்புகள் வீணாகாதா?

மீதமுள்ள ஆசிரியர்களாலும் தங்கள் வகுப்பினை கவனம் செலுத்தி நடத்திட முடியாது என்ற உண்மைகள் உணரப்படவில்லை.

பயிற்சி முழுமையாகவும்,சரியாகவும் வழங்கப்பட்டதா? பயனுடையதாக இருந்ததா?-என பங்கேற்ற ஆசிரியர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

CCE என்றால் என்னவென்றே இன்னும் புரியாமல் ஒரு சில இடங்களில் பள்ளிகள் நடைபெறுவதால், இப்பயிற்சி அவசியம் வழங்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

1 முதல் 5 வகுப்பு வரை -Activity Based Learning (ABL)
செயல் வழிக் கற்றல்
6 முதல் 9 வகுப்பு முடிய- Active Learning Methodology (ALM)
படைப்பாற்றல் கல்வி

-இவை இரண்டும் கற்பித்தல் முறைகள்.

CCE- என்பது மதிப்பீட்டு முறை.

மூன்று பருவங்களிலும் மாணவர்களை அவர்களது கற்றல் செயல்பாட்டை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யும் வழிமுறை.

இவற்றை இனிமேலும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என ஆசிரியப் பெருமக்களை அப்படியே விழுந்து கேட்டுக் கொள்கிறேன்.

6 முதல் 8 வகுப்பு முடிய போதிக்கும் ஆசிரியர்களுக்கு, வட்டார வள மைய ஆசிரியர்கள் (BRTEs) சுமார் 5 ஆண்டுகளாக தங்கள் தொண்டை தண்ணீர் வற்றிப் போகுமளவிற்கு கதறக் கதற ஆசிரியர்களுக்கு புரிய வைக்கும் பாட்டை, அங்கீகாரமற்ற BRTE என்ற வகையில் நான் அறிந்திருக்கிறேன்.

ஏன் இந்த முறை மதிப்பீட்டு முறை?

ஒரு மாணவனின் கற்றல் முறை, கற்றலை வெளிப்படுத்தும் முறை பலவிதங்களில் இருக்கும்.

அதை நான் எழுத்துத் தேர்வின் வாயிலாக மட்டும் தான் நான் அளவீடு செய்வேன் என்பது உலக அளவிலான கல்வி நிலையிலிருந்து வேறுபட்டு நிற்பதாகும்.

மாணவனின் தனித் திறனை வெளிக் கொணரவும், ஆளுமைப் பண்பினை மேம்படுத்தவும் CCE முறை அளவற்ற வாய்ப்புகளை அள்ளித் தருகிறது.

இவ்வார ஆனந்த விகடனில் 11 ஆவது வாரமாக பாரதி தம்பி, CCE குறித்து மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.

ஒரு வகுப்பில் இரு மாணவர்களை அழைத்து கரும்பு குறித்து எழுதுக என ஆசிரியர் சொல்ல, ஒரு மாணவன் எழுதி காண்பித்து விடுகிறான். அவனுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படுகிறது.

இன்னொரு மாணவன் சரிவர எழுதத் தெரியாத காரணத்தினால் அப்படியே அமர்ந்திருக்கிறான்.

மறு நாள் ஆசிரியர் வகுப்புக்கு கரும்பினைக் கொண்டு வந்து காட்டி, இது என்ன?-என இரு மாணவர்களையும் கேட்கிறார்.

சரியான பதிலை நேற்று எழுதிக் காட்டி முழு மதிப்பெண் பெற்ற மாணவன் விழிக்கிறான்.

எழுதவே இல்லாத மாணவன் 'கரும்பு' என சொல்கிறான்.

இப்போது இரண்டாமவனுக்கு மதிப்பெண் உண்டா?இல்லையா?

ஏன் தர வேண்டும்?

தொடரும்...