25 May 2015

CCE என்றால் என்ன?-2

என்ன சார்..இப்டிப் பண்றீங்களே சார்!

இப்பதிவின் குறிக்கோள் நிச்சயமாக ஆசிரியர்கள் மட்டுமல்ல. CCE முறை குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பவர்களும் தான்.

முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தவாறு, CCE என்பது கற்பித்தல் முறையல்ல.

மதிப்பீட்டு முறை.

அதுவும் முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை.

அதென்ன முழுமையான?

ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களில், படத்திலுள்ளவாறு கற்றலில் பல நிலையிலான மாணவர்கள் நிக்சயம் இருப்பார்கள்.

அதாவது கற்பிப்பது ஒரே பாடம் தான்.
ஒரே முறையில் தான்.

ஆனால் அவன் அந்தப் பாடத்தைப் புரிந்து கொள்ளும்,கற்றுக் கொள்ளும் நிலையில் தான் (Learning Style) வேறுபாடு இருக்கிறது.

Robert Frost இனுடைய Going for Water என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம் (10 ஆம் வகுப்பிற்கு CCE இல்லை).

"We ran as if to meet the moon
That slowly dawn behind the trees
The barren boughs without the leaves,
Without the birds,without the breeze"

- என்ற வரிகளை ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு போதிக்கிறார் என வைத்துக் கொள்வோம்.

அவ் வகுப்பறையில் இருக்கும் மாணவர்களில் சிலர், இப்பாடலை கேட்டலின் மூலமாக ,Auditory (ஆசிரியர் பாடியோ அல்லது சிடிக்கள் உதவியுடனோ, ராகத்தோடோ,இல்லாமலோ) கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

ஒரு காடு.அங்கிருக்கும் அடர்ந்த மரங்கள். இருள் தொடங்கி, நிலவு மெல்ல மெலழும்பும் நேரமது.காடுகளில் இருக்கும் மரக்கிளைகளில் இலைகளில்லை.குருவிகளில்லை,தென்றலுமில்லை. இக்காட்சியை அப்படியே ஓவியமாக,படமாக,வீடியோவாகப் பார்த்தால் (Visual) கற்றல் சிலருக்கு எளிதாக இருக்கும்.

சிலர் இப்பாடலுக்கு உகந்த சூழலில் மரங்களை,கிளைகளை தொட்டு, கண்டு, மாதிரியாக செய்து உணருகையில் (Kinesthetic)தெளிவாகக் கற்பார்கள்.

இன்னும் சிலர் தனியே அமர்ந்து படித்து தெளிவர் (Intra Personel).

சிலருக்கு நண்பர்களோடு குழுவாய் அமர்ந்து (Inter Personel) படிப்பதில் ஆர்வமதிகமாயிருக்கும்.

இன்னும் சிலருக்கு வார்த்தைகளே (verbal) போதுமானதாக இருக்கும்.
Logical ஆக கற்கும் மாணவர்களுமுண்டு.

-இப்படி ஒரு வகுப்பறையில் மாணவர்களிடம் கற்றலிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன.

மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், மேற்குறிப்பிட்ட ஏதோ ஒரு வகையில் அவன் ஒரு பகுதியை கற்றுக் கொள்கிறான்.

சரி.... இப்போது நாம் மாணவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஒரே வகுப்பறை.
ஒரே பாடப் பகுதி.
ஆனால் பலவிதமான விதங்களில் அப்பகுதியை
ஆர்வமோடு கற்றுக் கொண்ட மாணவர்கள்.

-இவர்களை ஒரே விதமாக ஒரு எழுத்துத் தேர்வினை வைத்து மதிப்பெண் வழங்குவது சரியா?

தவறென நினைத்தோரின் மனதில் உதித்தது தான் CCE.

மனப்பாடம் செய்து அப்படியே எழுதத் தெரியாத, மன வளர்ச்சி குன்றிய, பார்வைத் திறனற்ற , டிஸ்லெக்ஸியா உள்ள குழந்தைகளுக்கெல்லாம்,

ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வின் வாயிலாக மதிப்பெண் வழங்குவது அநீதியா இல்லையா?

படத்தைப் பாருங்கள். பல வகையிலான விலங்குகளுக்கு, ஒரே மாதிரியான பணியை அளிக்கும் 'டாஸ்க் மாஸ்டரை'!