14 Jun 2015

காக்கா முட்டை



சந்திரமுகி தொடங்கி தொடர்ச்சியாக பேய்ப்படங்களாய் தமிழ்த் திரையுலகில் கோலோச்சி வரும் இக் காலகட்டத்தில்,
அஜீத், விஜய்,சூர்யா-என ரசிகர்கள் ட்விட்டரிலும்,ஃபேஸ்புக்கிலும் போட்டா போட்டி போட்டு போஸ்ட்டுகளை தம் ஆஸ்தான ஹீரோ படத்தை பாராட்டி பதிந்து வரும் நிலையில், சத்தமில்லாமல் சாதித்திருக்கிறது ஒரு குட்டிப் பட்டாளம்.

எல்லாத் தளங்களிலும் விவாதப் பொருளாகி, தமிழ்த்திரையுலகின் தரத்தை ஒரு படி உலக அளவிற்கு முன்னெடுத்துச் சென்ற தயாரிப்பாளர்கள் தனுஷ்,வெற்றி மாறன் கூட்டணிக்கு ஒரு ராயல் சல்யூட்!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பாடல் காட்சிக்கும், சண்டை காட்சிகளுக்குமாய் சுற்றி வரும் தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில்,
அண்ணன் விக்னேஷ், தம்பி ரமேஷ் என்ற சென்னை சேரிப் பகுதியில் வாழும் சகோதர கூட்டணியையும், அவர்களின் தாய்,தந்தை,பாட்டி, நண்பர்கள், சக சேரி மக்களென்ற கதைக் களத்தை கையிலெடுத்துக் கொண்டு வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

உலக மயமாக்கல், கட்டாயப் படுத்தி அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் தவிப்பவனையும் ஒரு பொருளை ஆசை மூட்டி வாங்க எண்ணம் கொள்ள வைக்கும் விளம்பர உத்தி என  அன்றாடம் மனிதன் படும் அல்லல்களை காட்சிகளாய் வைத்து சிந்திக்க செய்திருக்கிறார்கள்.

குடும்ப சூழலால் பள்ளிக்குச் செல்ல இயலாமல், நிலக்கரியை சேகரித்து காசு பார்க்கும் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை இருவரும் ‘பீட்ஸா’ சாப்பிட ஆசைப்பட்டு காசு சேர்க்கிறார்கள். சாப்பிட்டார்களா இல்லையா என்பது கதை.

ஒரு சிறிய கதையை, சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பது அவ்வளவு எளிதான காரியமன்று.

தகுந்த காட்சி அமைப்புகள்,வசனங்கள், ஒளிப்பதிவு,படத்தொகுப்பு –இப்படி நிறைய சவால்களை ஒரு திரைக்கதை எதிர்கொள்ளும்.
கதாப்பாத்திரங்களில் ஒன்று சொதப்பினாலும் மெனக்கெட்டு எடுத்த ஒரு காட்சியின் அத்தனையும் சொதப்பலாகிவிடும்.

இங்கே எல்லா சவால்களையும் அறிமுக இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான மணிகண்டன் ஊதித் தள்ளியிருக்கிறார்.

அற்புதமான பட த் தொகுப்பாளராக வலம் வர வேண்டிய கிஷோரின் திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கே பேரிழப்பு என்பதற்கு இப்படம் ஒன்றே சான்று.
அன்றாடம் நாம் கடந்து செல்லும் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் இன்பங்களை சின்ன சின்ன காட்சிகளாய் அடுக்கியிருக்கிறார்கள்.

குறும்படம் போல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மட்டுமே ஓடக் கூடிய ஜிகினாத்தனங்கள் எதுவுமில்லாத இப்படம் திரையிடப்பட்ட இடமெல்லாம் மக்கள் திருவிழா தான்.

பெரிய ஹீரோ,ஹீரோயின்கள் இல்லை. பிரபலங்கள் எவரும் பணியாற்றவில்லை என வழக்கமான படங்களைக் கடந்து செல்வதுபோல் நாம் காணாமல் இதை கடந்து சென்றுவிட்டால், இழப்பு நமக்குத் தான்.


"காக்கா முட்டை" குடும்பத்தோடு கற்க வேண்டிய நாம் வாழும் சமுதாயத்தின் பாடம்.