1 Jul 2015

"Big Fun" தாத்தா


வீட்டிலிருந்து பயின்ற பள்ளிக்கு சுமார் 2.5 கி.மீ நடைபயணம். 

குறுகலான,அன்றாட பரபரப்பான தார்ச் சாலையொன்றின் வலது புறத்தில் அமைந்திருந்தது அந்த சிறிய கடை.

நட்ராஜ் பென்சில்,டிசைன் ஸ்கேல், கலர் கலரான நுகர்ந்து பார்த்தால் வாசனையுடன் நம்மை சுவைத்து பார்க்கலாமா?- என எண்ண வைக்கக் கூடிய விதவிதமான ரப்பர்களை உள்ளடக்கிய பாட்டில்கள்-இப்படி வரிசையாய் அடுக்கி வைத்து அமைதியாய் அமர்ந்திருப்பார் அந்தத் தாத்தா.

நான்கைந்து மரப்படிகளிலேறித் தான், தாத்தாவை தரிசிக்க முடியும் நாம்.
அவ்வளவு உயரத்திலிருக்கும் அந்தக் கடை.

கையில்லாத வெள்ளை பனியன், லுங்கி-இது தான் அவரது காஸ்ட்யூம் என்றாலும்,
"வாடா...தம்பி... நல்லாருக்கியா... நல்லா படிக்கிறியா... என்னா வேணும் சொல்லு?"-என வாஞ்சையாக சிரித்துக் கொண்டே தாத்தா கேட்கும் போது,கடையே நம்முடையது போன்ற உணர்வு வந்து விடும்.

"BIG FUN"-என்ற பெயரில் பிங்க் நிற 'பப்புள் கம்' மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்களவை.

பப்புள் கம்மை சுற்றி உள்ளே இருக்கும் வெள்ளைத் தாளில் 'ஸ்டார்' குறி இருந்தால், நமக்கு அதிர்ஷ்டம் தான்!

அது போல மொத்தம் 5 ஸ்டார்களை சேர்த்துக் கொடுத்தால், ஒரு பப்புள் கம் இனாமாகக் கிடைக்கும்.

-இப்படி எனக்கு பப்பிள் கம்மை சிரிக்க சிரிக்கக் கொடுத்தவருக்கு, 'Big Fun' தாத்தா என்றே நான் பெயர் வைக்கக் காரணம், என்னிடம் காசு குறைந்தாலும், அப்புறம் கொடு என அவர் நான் கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுத்தது தான்.

எப்படி 'பப்பிள் கம்மை' வாயால் மென்று ஊதி 'முட்டை' விட வேண்டுமென கற்றுக் கொடுத்த என் 'Big Fun' தாத்தாவுக்கு படிப்படியாக உடம்பு ஊதிக் கொண்டே போனது.

கை,கால்கள் வீங்கினாலும் அவரிடம் சிரிப்பும்,அந்த வாஞ்சையான பேச்சும் மாறவே இல்லை.

திடீரென தொடர்ச்சியாக சில தினங்கள் மூடப்பட்டிருந்த கடை, பின்னர் மரப்படிகளோடு அகற்றப்பட்டதற்கான காரணத்தை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.