1 Jul 2015

வினை விதைத்தவன்



நிர்க்கதியாய் நீண்டு கிடந்த பாழடைந்த கட்டிடமொன்றின் வராந்தாவில் கால் நீட்டி தினம் வந்து படுப்பார் அந்தப் பெரியவர்.
சங்கர் சிமென்ட்டு சாக்கில் தைத்த பையொன்று. அதனுள் சோப்பிற்கு சவால் விடும் நிறத்தில் சில நைந்த ஆடைகள்.
நெளிந்த ஒரு தூக்கு வாளி.
வளைந்த கம்பொன்று.
-இத்தனை சகாக்களோடு அன்றாடம் பொழுதோட்டியவரிடம், என் பொழுது போக்க ஒரு நாள் பேசினேன்.
5 மகன்கள், ஒரு மகள்.
5 மகன்களும் குழந்தையிலேயே செத்துப் போய்விட, ஒரு மகளுக்கு மட்டும் திருமணமாகிவிட்டது.
இவரது மனைவிகளும்
(!?!) மரித்துப் போயினர்.
இரு வேறு சாலைவிபத்துகளில் செவித் திறனையும்,விழித்திறனையும் நிறைய இழந்து போயிருப்பவருக்கு,
வாழ்க்கைத் துணையாயிருப்பது 'மகிழம் பூக்கள்'.
ஆங்காங்கே சென்று உதிரும் மகிழம் பூக்களை சேகரித்து காய வைத்து, ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் கொடுத்தால், கிலோவிற்கு 30 ரூபாயாம்.
அது சரி... அவரது வாழ்க்கைத் துணைவிகள் பற்றித் தானே கேட்கிறீர்கள்?
4 மனைவிகளாம் இந்த மகராசனுக்கு...
இப்போது யாரும் உயிரோடில்லை.
இருக்கும் ஒரு மகள் தினம் ஒரு வேளை மட்டும் சோறு போடுகிறாளாம்.
-காலம் இவருக்கு சோறு போடுகிறது, இவரது பாவங்களை இவருக்கே ஒவ்வொரு நொடியும் நினைவூட்டி!