12 Jul 2015

பாகுபலி



Arri Alexa XT கேமராவைக் கொண்டு ஷூட் செய்யப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் மட்டுமே இப்போது வெளிவந்துள்ளது.

40 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், மூன்றாண்டுகாலம் ஷூட் செய்யப்பட்ட இப்படம் உலகெங்கிலும் முதல் நாளன்றே 10 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டி வசூலித்து விட்டது.

படத்தின் போஸ்டர் முதற்கொண்டு பிரமாண்டம் தான். கொச்சியில் இப்படத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டர் தான் உலகிலேயே மிகப் பெரிய போஸ்டராம்.

தமிழ்,தெலுங்கில் நேரடியாகவும், இந்தி,மலையாளத்தில் டப் செய்யப்பட்டும் இப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

மஹாபாரதமே இப்படமெடுக்க உந்துதல் என, இயக்குனர் 'நான் ஈ' ராஜமௌலி கூறுகிறார்.

சாபுசிரில் அவர்களை 'திரையுலக பிரம்மா' என்றால் தவறில்லை.
மிகக் கடுமையாக உழைத்து பிரமாண்டமான மன்னர் கால அரண்மனை சார்ந்த விஷயங்களையும், களத்தையும் அமைத்து அசத்தியுள்ளார். கொஞ்சம் தவறி இருந்தாலும் ஒட்டு மொத்த படமும் பிசிறடித்திருக்கும்.

சதீஷ் தான் சவுன்ட் இஞ்சினியர். படம் முடித்த பின் சிறப்பு சப்தங்களை சேர்க்காமல், படப்பிடிப்பு தளம் முழுக்க ஆங்காங்கே மைக்ரோ போனை பயன்படுத்தி நேரடியாக சப்தங்களை பதிவு செய்து உயிர்ப்புடன் படம் இருக்க உதவியிருக்கிறார்.

பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். பழங்கால சண்டைகளை அமைப்பது சவாலான விஷயம்.
ஒரே நேரத்தில் சுமார் 2000 பேர் மற்றும் யானைகளை சண்டையிட வைத்திருக்கிறார்.

கார்க்கி இப்படத்திற்கான வசனத்திற்கு நாடோடி மன்னனையும், மனோகராவையும் இன்ஸ்பிரேஷனாகக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்.

ஒளிப்பதிவு செந்தில்குமார்.
"I have butterflies in my stomach" -என்றால் என்ன? -என்பதை நமக்கு விளக்குவதற்காகவே நீர் வீழ்ச்சியிலும், மலையிலும்,மழையிலும்,போர் நடக்கும் பாலைவன பகுதிக்குள்ளும் ஈடுபாட்டோடு உழைத்திருக்கிறார்.

நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம்-என பஞ்ச பூதங்களையும் கேமராவைக் கொண்டு சுழல வைத்திருக்கிறார்.

தமன்னா, அனுஷ்கா,ரம்யாகிருஷ்ணன்-அவரவர் பகுதியை போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

தமன்னா சண்டை போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு பாவமான குழந்தை முகம். தாய் நாட்டின் எதிரிகளை காட்டுக்குள் ஒளிந்திருந்து வாள் சுழற்றித் தாக்கி தாண்டவமாடியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன், இன்னொரு நீலாம்பரி.

அனுஷ்கா ஆக்ரோஷப் பூங்காவாய்...

நாசர்,சத்யராஜ் இருவரும் இப்படத்தின் கதையில் முக்கிய பாத்திரங்கள்.

இரட்டை வேடங்களில் ஹீரோ ப்ரபாஸ்... கட்டுமஸ்தான உடலில் துள்ளலும்,குறும்பும்,கோபமும் கொப்பளிக்கின்றன.

குறைந்த பட்சம் இரண்டு பாடல்களாவது வீண். இதுவே படத்தை இழ்ழ்ழ்ழுத்துக் கொண்டு செல்கிறது.

மற்றபடி "பாஹுபலி" என கூட்டம் கூவும் போது, நம் உடம்பில் மயிர்க்கால்கள் எல்லாம் உச்சத்தைத் தொடுகின்றன.

அடேங்கப்பா போட வைக்கும் போர் தந்திரங்களும்,காட்சிகளும்.

-அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்றுப் படம்.