14 Jul 2015

வெயிலோடு விளையாடு


எனது இந்த 'ஏழரைக்' கழுதை வயது அனுபவத்தில் இப்படியொரு கோடையைக் கண்டதில்லை.
பொங்கலின் போதே 'ஊ...லலல்லா...' பாட ஆரம்பித்து விட்ட கோடை, இளநீர், நுங்கு, வெள்ளரி-என காண்போரையெல்லாம் காவு வாங்கியது.
கருந்தார்ச்சாலையில் சென்ற மக்களெல்லாம், அதில் தெரிந்த கானல் நீரை அருந்தலாயினர்.
வெயிலுக்கு வெண்குஷ்டம் வந்தார்போல் அனைவரையும் கலங்கடித்தது.
கத்தரி வெயிலின் போது அவ்வப்போது பெய்த மழை, இந்திரன் எடிட் செய்து வெளியிட்டதென்பதை அறியாமல் குதூகலித்தனர் மக்கள்.
கத்தரி முடிந்தும், காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, பட்டன் போடாத சட்டையோடு பவனி வந்தான் சூரியன்.
ராசிபலனைப் போல் மழைப் பலன் பார்க்க ஆரம்பித்தனர் மக்கள்.
ஜுன் பிறந்தது. சூரியன் தன் குடும்ப சகிதம் வந்து எரிச்சல் இலையில் வியர்வை தெளித்து வெயிலைப் பரிமாறினான்.
இதோ ஜுலை பிறந்து முடியப் போகிறது.
பகல் முழுக்க 100 டிகிரிக்கு மேல் அடிக்கும் வெயிலால், 'டிக்கியில்' அயர்ன் பாக்ஸ் வைத்தது போல் அலறுகின்றனர் குழந்தைகள்.

அன்றாடம் மாலை, கறுத்து திரளும் மேகங்களெல்லாம் பங்களாதேஷ் சென்று பொழிந்து இந்திய கிரிக்கெட் அணியை தோல்வியுறச் செய்து அவமானப்படுத்தியது தான் மிச்சம்.
நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பணிக்கு வந்து இன்னமும் ஓய்வு பெறாமல், கலர் கலரான சட்டையோடு, 'வங்ங்ங்கக்க்க் கடலில்...' என ஆரம்பித்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில இடங்களில்....' என முடிக்கும் ரமணனுக்கு 'மழையோ மேனியா' வந்துவிட்டது போலவே தோன்றுகிறது.
அம்மாவிற்கு கிட்னி ஃபெயிலியரோ இல்லையோ, நமக்கெல்லாம் கிட்னி சுருங்கி, இருக்கிற அவரை விதை சைஸ், 'ஆட்டாம் புழுக்கை' சைஸாய் விரைவில் ஆனாலும் ஆச்சர்யப் படுதற்கில்லை.
ஆகவே மக்களே.... மோடி கருப்புப் பணத்தை நம்மூருக்கு கொண்டு வருகிறாரோ இல்லையோ, கரு மேகத்தைக் கொண்டு வந்து மழை பொழிய வைக்க ஏதேனும் செய்தால் தான் நன்றாக இருக்கும். இல்லையேல் வெயிலின்  இச்சதிச் செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியிருக்கும்.
-பாகிஸ்தானிலிருந்து, நவாஸ்செரீப்புடன், ஹக்கின மாட்டட்டா..