1 Jul 2015

குலோப் ஜாமுன்


காலையிலேயே குலோப்ஜாமூன் படத்த பார்த்ததும், அது பத்தி எழுத தோணிச்சு. இனிப்பா இன்னைக்கு தொடங்கலாம்ல...
****மொகலாய மன்னர்களின் வருகையின் போதுதான் (17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில்) திராட்சை, ரோஜா தவிர பாசந்தி,பாதுஷா மற்றும் குலோப்ஜாமூன் உள்ளிட்ட இனிப்பு வகைகளும் அறிமுகமாயின.
****ரொட்டித் துண்டாலான சுட்ட ஒரு திண்பண்டத்தை பெர்ஸிய மொழி இனத்தவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்திருந்தனர். அந்த பெர்ஸிய மொழியிலிருந்து உருவான வார்த்தையே 'குலோப்ஜாமூன்'.
****பெர்ஸிய மொழியில்,
'குல்' என்றால் மலர் என்று பொருள்.
'அப்' என்றால் நீர் என்றும் அதாவது ரோஜா வாசனை தரும் நீராகும்.
'ஜாமூன்'-என்பது "சிஸிஜியம் ஜம்போலனம்" என்ற சிறிய உருண்டையான ஒரு இந்தியப் பழமாகும் (நாவல் பழம்).
சிறு வயதில், "குலோப் ஜாமூன்" -என்றால் என்னவென்றே தெரியாமல் நான் குழம்பிய நாட்களுமுண்டு.
தஞ்சாவூர் 'பாம்பே ஸ்வீட்ஸ்" கடையில் சந்திரகலா இனிப்பைப் போல 'ட்ரை குலோப் ஜாமூன்" மிகப் பிரபலம்.
டிரை குலோப் ஜாமூனை, அரை டிராயரில் போட்டுக் கொண்டு சென்று, எனக்குப் 'பிடிக்காத' ஆங்கிலப் பாடத்தை வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் போது உண்டு மகிழ்ந்த நாட்களுமுண்டு.
அப்போதெல்லாம் என் அக்காவும்,தங்கையும் டிவியில் வரும் சமையல் குறிப்புகளைப் பார்த்துவிட்டு பதார்த்தம் ஏதேனும் செய்து, என் வயிறை பதம் பார்ப்பதையே குறியாகக் கொண்டிருந்தார்கள்.
குறிப்புகளை பார்த்துவிட்டு பதார்த்தம் செய்யும் போது மட்டும் சமையலறையிலிருந்து வினோதமான சத்தங்கள் எழும். வயிறு லேசாக வலிக்கிறது என நான் அலெர்ட் ஆக ஆரம்பித்தாலும் அவர்கள் விட மாட்டார்கள்.
ஒரு முறை இப்படி குலோப்ஜாமூனை செய்து கொண்டு வந்து வைத்த பொழுது நான் காமிக்ஸ் படித்துக் கொண்டிருந்த ஸ்வாரஸ்யத்தில், எதுவுமே சொல்லாமல் சாப்பிட்டு முடித்துவிட்டேன்.
"ஏண்டா... சாப்ட்டியே... எப்டி இருந்துச்சுன்னு ஒரு வார்த்த கூட சொல்லலையே...?"-என்றாள் என் அக்கா.
"ஓ.... சீடையா! செம்ம்ம டேஸ்ட்!"-என்றேன்.
இப்பதிலுக்காக விஜயகாந்த் பட வில்லனைப் போல என்னை மாறி மாறித் துவைத்தெடுத்தார்கள்.
நெக்ஸ்ட்:
ரஸகுல்லா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'நொபீன் சந்திர தாஸ்' தான் முதன்முதலாக ரஸகுல்லாவைக் கண்டுபிடித்தார். அது பிரபலமான கதை 20 வரிகளில் இனிப்பான ஒன்றாகும்.