14 Jul 2015

வண்ணத்துப் பூச்சிகளை விற்பனை செய்பவன்




முன்பே சொன்ன நிகழ்வுதான்!
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையிலிருக்கும் ஒரு கல்லூரியில் மாநில அளவிலான கவிதைப் போட்டி.
கவிஞர் அறிவுமதி அவர்கள் 'ஆன் த ஸ்பாட்' தலைப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். கவிஞர் பழனிபாரதி பார்வையிட்டுச் சென்றார்.
கவிஞர் நா.முத்துக் குமார் அவர்கள் எழுதிய கவிதைகளுள் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிக்க வந்தார்.
என் கவிதையை முதல் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்துவிட்டு, என்னை அழைத்து வரச் சொன்னார். நீண்ட நேரம் தனியே என்னிடம் உரையாடினார். என் கவிதைகளை வாங்கிப் படித்துவிட்டுப் பாராட்டி கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
'வால்ட்விட்மென்' உள்ளிட்ட கவிஞர்களை வாசிக்குமாறு பணித்தார். என் கவிதைகள் சிறப்பாக இருப்பதாகவும் திரைத்துறைக்கு வரும் எண்ணமிருந்தால் அதை மறுபரிசீலனை செய்யுமாறும் ஒரு சகோதரனாய் அறிவுரைத்தார்.
"தென்னை மரமே... தென்னை மரமே... உடம்பில் வளையல்கள் ஏனோ? திருமணம் உனக்குத் தானோ?"
-என்ற வரிகளை 'டும்டும்டும்' படத்திற்காக தற்போதுதான் எழுதி திரும்பியிருப்பதாகக் கூறினார்.
தனது முகவரியை கொடுத்தார். எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திக்கலாமென்றும் சொன்னார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மட்டும் 103 பாடல்களை எழுதி சாதனை செய்தார்.
வானத்தப் போல படத்தில் வரும், - 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை'-என்ற பாடல் வரிகள் என்றும் எனக்குப் பிடிக்கும்.
"அங்காடி தெரு,கஜினி,7ஜி ரெயின்போ காலனி, பீமா,காதல்,நீதானே என் பொன்வசந்தம்,சந்தோஷ் சுப்ரமணியன்,சிவாஜி,யாரடி நீ மோகினி"- போன்ற படங்களுக்காய் இவர் எழுதிய பாடல்கள் வரலாற்றுப் பதிவுகள்.
தங்கமீன்கள் படத்திற்காய் இவர் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலும், சைவம் படத்திற்காய், 'அழகே..அழகே' பாடலும் தேசிய விருதைப் பெற்றது.
காஞ்சிபுரத்தில் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது தாயை 4 வயதிலேயே இழந்தார்.
புத்தகங்களும்,எழுத்துகளும் இவரை தாயாய் வழி நடத்தின.
4 ஆண்டுகள் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு சீமான் இயக்கிய 'வீர நடை' படத்திற்காக தன் முதல் பாடலை எழுதினார். ஆனால் அது 32 ஆவது பாடலாகத்தான் வெளிவந்தது.
கல்லூரியில் படித்த பணியாற்றிய நாட்களில் இவரது 'பட்டாம்பூச்சிகள் விற்பனை செய்பவன் ,பலூன் காரன்வராத தெரு. நியூட்டனின் மூன்றாம் விதி' - ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.
தலைக்கனமில்லாத எளியவர். எனக்கெல்லாம் அவரது நேரத்தை ஒதுக்கி அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லைதான். ஒருவேளை அவர் சொல்லாவிட்டால் தடம் மாறியிருப்பேனோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.
அன்றைய நண்பர், மனிதாபிமானிக்கு இன்று பிறந்த நாள். இன்னும் நிறைய சாதிக்க மனதார வாழ்த்துகிறேன்.