4 Jul 2015

பாபநாசம்



இரண்டு பெண் பிள்ளைகள், அன்பான மனைவி என ஒரு அற்புதமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் 4 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றும் சுயம்பு லிங்கத்தைச் சுற்றி நடக்கும் க்ரைம், த்ரில்லர் கம் குடும்பக் கதை.

அகஸ்தியர் மலைக்கு கல்விச் சுற்றுலாவாக செல்லும் மூத்த மகள் குளிப்பதை தன் செல்போன் மூலமாக வீடியோ எடுத்து சுற்றுலா முடிந்ததும் வீட்டிற்கே வந்து காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுகிறான் வருண்.

காலில் விழுந்து கதறும் அந்தப் பெண்ணின் அம்மாவையாவது இணங்க வருமாறு அழைக்க, பின்னால் நிற்கும் மகள், அவன் கையில் இருக்கும் வீடியோவுடனான செல்போனை தட்டி விடுவதற்காக இரும்புக் கம்பியால் தாக்குகிறாள்.

தவறி வருணின் தலையில் தாக்கி விடவே, அங்கேயே செத்துப் போகிறான் அவன். பிணத்தை புதைத்து விட்டு காவல் துறையிடமிருந்து அதை மறைக்க, ஒட்டு மொத்தக் குடும்பமுமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போராடுகிறது.

என்னதான் ஆகிறது என்பதை ஸ்வாரஸ்யமான திருப்பங்களுடன் விவரித்திருக்கிறார் 'ஜீத்து ஜோஸப்'. படத்தின் கதை,திரைக்கதை,இயக்கம் எல்லாம் இவரே.

இவரின் 'திருஷ்யம்' மலையாள படத்தின் ரீமேக் இது.அங்கே மோகன்லால்,மீனா. இங்கே கமல்,கௌதமி. அங்கே மலையாள கிறிஸ்தவக் குடும்பம். இங்கே திருநெல்வேலி இந்து தமிழ்க் குடும்பம்.

முதலில் ரஜினிகாந்தைத் தான் கமல் பாத்திரத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். தன் ரசிகர்களை சில காட்சிகளில் திருப்திப்படுத்த முடியுமா என அவர் தயங்கியிருக்கிறார்.

சிம்ரன், நதியா,ஸ்ரீதேவி, அபிராமி என சுற்றி கமலோடு நடிக்க கடைசியில் கௌதமிக்கு வந்தது வாய்ப்பு.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கௌதமி வாழ்ந்திருக்கும் படம். ஒரு நடுத்தர குடும்பத்தின் பொறுப்புள்ள தலைவியாக, இரண்டு மகள்களுக்குத் தாயாக உணர்வுகளை அச்சு அசலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாவலாசிரியர் ஜெயமோகன் வசனங்களை எழுதியிருக்கிறார்.
திருநெல்வேலி பாஷையை பேச கமலுக்கு சிறுகதை எழுத்தாளர் (ஆனந்தவிகடனில் மூங்கில் மூச்சு) உதவியிருக்கிறார்.

இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை பரபர காட்சிகளுக்கு ஏற்றவாறு பிரமாதம் ஜிப்ரான்.

சுஜித் வாசுதேவின் கேமரா, பாபநாசத்தின் மழை காலத்து பச்சைப் பசேல் அழகை நம் கண் முன்னே விருந்தாய் படைக்கிறது.

சார்லி,டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் என சிலர் வந்து போகிறார்கள்.

கலாபவன் மணியின் நடிப்பு வழக்கம் போல மிரட்டல்.

ஐ.ஜி. கீதா பிரபாகராக நடித்திருக்கும் ஆஷா சரத் மலையாளத்தில் நடித்த அதே பாத்திரத்தில் இங்கேயும்.
கமலின் நடிப்புக்கு ஈடாக இப்படத்தில் சில காட்சிகளில் கிட்டத்தட்ட சவால்விடும் வகையில் நடித்துள்ளார்.

எல்லாம் சொல்லிவிட்டு கமலின் நடிப்பு குறித்து சொல்லாமல் போனால் எப்படி?

சிக்கனமான குடும்பத் தலைவராக,கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருப்பதால் திரைப்படங்களை காட்சிக்குக் காட்சி அதிலும் குறிப்பாக சிவாஜிகணேசனின் பாசமலர் படத்தை பார்த்துக் கலங்கும் காட்சி,

குடும்ப மானத்தை காப்பதற்காக எல்லோரையும் அமர வைத்து வகுப்பெடுக்கும் காட்சி,

கை விரல்களையெல்லாம் ஒடித்துவிட்டு அடித்து துன்புறுத்தும் போதும் குடும்பத்திற்காக உண்மையை உளறாமல் கதறும் காட்சி,

கடைசியில் ஐ.ஜி. குடும்பத்திடம் " நான் ரொம்ப சின்ன மனுஷங்க... என் குடும்பம் தான் என் உலகம். சிறுக சிறுக நாங்க சேர்த்து கட்டி வச்ச, எங்க குடும்ப கூட்ட ஒருத்தன் சிதைக்க வர்றப்ப எங்களுக்கு வேற வழி என்னாங்க இருக்கும்?"-என கண் கலங்கி அழும் காட்சி

- என கைதட்டலை திரையரங்கில் ரசிகர்களிடமிருந்து அள்ளி நடிப்புலகின் மகுடமாய் ஜொலிக்கிறார்.

செல்போன்கள் பெண்களின் வாழ்விற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதையும், அக்கருவியிடமிருந்து அவர்கள் எந்த அளவிற்கு விலகியோ அல்லது எச்சரிக்கையாகவோ இருக்க வேண்டுமென்பதை மறைமுகமாகவும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

தன் வீட்டை விட்டு வெளியில் செல்லுமிடங்களிலெல்லாம் ஒரு பெண் எவ்வளவு முன் ஜாக்கிரதையோடும்,விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டுமென்பதையும் சொல்லியிருக்கிறது இப்படம்.

"பாபநாசம்" - அனைவரும் அவசியம் திரையரங்கிற்கு சென்று பார்த்து, சேர்த்துக் கொள்ள வேண்டிய புண்ணியம்.