1 Jul 2015

ரசகுல்லா




குலோப்ஜாமூனோ,ரசகுல்லாவோ, அது 'ஜீரா'வில் ஊறிக் கொண்டிருக்கும் போது சாப்பிடுவதுதான் சாலச் சிறந்தது.

ஜீரா இல்லாமல் இவ்விரண்டு இன்னிப்பு வகைகளையும் நினைத்துப் பார்த்தால், ஊழலற்ற நம்மூர் அரசியல்வாதிகள் போல சம்பந்தமே இல்லாதிருக்கும்.

சர்க்கரைக் கரைசலில் ஊறிக் கொண்டிருக்கும் இந்த உருண்டைகளை ஸ்பூனில் குத்திக் கொலை செய்து சாப்பிடும்போது மட்டுமே நம் நாக்கும் மனதும் இனிக்கும்.

ரசகுல்லாக்களை பொருத்தமட்டில் கொல்கத்தாவை அடித்துக் கொள்ள முடியாது.

2016 ஆம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் போது திட ரசகுல்லாக்களையும் மனிதர்களோடு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஆய்வு செய்து வருவதிலிருந்தே ரசகுல்லாக்களின் பெருமை விண்ணைத் தொடுவதை நாம் அறியலாம்.

கொல்கத்தாவில் பரம ஏழையாக இருந்த 'நொபின் சந்திரதாஸ்' என்ற நபர்தான், ரசகுல்லாவை முதலில் தயாரித்தார்.
ஆனால் அதை யாரும் வாங்க மறுத்தனர். செய்த ரசகுல்லாக்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு,
வின்னர் வடிவேலு போல, கால்களை கதவில் வைத்து தூங்கிக்கொண்டிருந்த நொபினுக்கு 'பகவான்' தான் அருளினார்.

ஆம். படகில் சுற்றுலா வந்த பகவான்தாஸ் பக்லா என்பவர், நொபின் சந்திரதாஸ் வீட்டருகே தான் பயணம் செய்த படகை நிறுத்தினார்.

பகவானின் கூட வந்த மகன் குடிக்க தண்ணீர் கேட்டு அடம் பிடிக்கவே,தண்ணீருக்காக நொபின் வீட்டுக்கு சென்றார்.

தண்ணீர் யாரேனும் கேட்டால், வெறும் தண்ணீரை மட்டும் தருவது அங்கே வழக்கமில்லை. கூடவே ஏதாவது இனிப்போ குறைந்தபட்சம் சர்க்கரையையாவது தருவார்கள்.

நொபின் விற்காதிருந்த ரசகுல்லாவை பகவானின் மகனுக்குத் தந்தார். அதன் சுவை மகனுக்குப் பிடித்துப் போக, நிறைய ரசகுல்லாக்களை காசு கொடுத்து வாங்கிச் சென்றார் பகவான்.

தன் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் மிகவும் பிடித்துப் போக அப்படியே ஒரு சுற்றுக்குச் சென்ற ரசகுல்லா, ராஜ மகுடத்துடன் வலம் வர ஆரம்பித்தது.

அதன்பின்னர் தூங்க நேரமின்றிப் போனது நொபினுக்கு.

நொபினின் வாரிசுகளின் கடைகள் தற்போது உலக அளவில் பிரசித்தி பெற்றவை.