1 Jul 2015

ஹெல்மெட் சிக்கல்


புதிதாக அனைவரது மண்டையையும் உடைக்கப் பிறந்திருக்கிறது 'ஹெல்மெட்' பிரச்சனை.
பொங்கலுக்கு முந்தைய தினம் "கரும்பு வாங்கியாச்சா? கட்டு என்ன விலை?" என ஒருவொருக்கொருவர் விசாரிக்கும் அதே தோரணையில் ஹெல்மெட் குறித்தான விசாரணைகள் விறுவிறுப்படைந்துள்ளன.
கூட்டம் கண்டதும் கரும்புக் கட்டின் விலையை ஏற்றுவது போல், இரு மடங்காகி,இப்போது மும்மடங்கிற்கு விற்கப்படுகின்றன ஹெல்மெட்டுகள்.
நேரம் ஆக ஆக, பில் வாங்கவோ, தரத்தைப் பரிசோதிக்கவோ முடியாத வகையில் மக்கள் முண்டியடிப்பதைப் பார்த்தால், மண் பானைக்கு பெயின்ட் அடித்துக் கொடுத்தாலும் மாட்டிக் கொண்டே செல்வார்கள் போலிருக்கிறது.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே நான் ஹெல்மெட் வாங்கிவிட்டேன். ஆனால் அதை நான் பனிக்காலங்களிலும்,மழைக்காலங்களிலும் பயன்படுத்தி என்னால் முடிந்த அளவிற்கு மருத்துவர்களின் பணிச் சுமையை குறைத்து வருகிறேன்.
என் மனதிற்குள் ஆத்திரமாய் எழும் கேள்விகள்:
மோட்டார் வாகன சட்டப்படி, புதிதாக வாகனம் வாங்கும் பொழுது, அந்த நிறுவனமே வாகனத்தோடு ஹெல்மெட்டும் வழங்க வேண்டுமென்ற விதிமுறை இதுவரை பின்பற்றப் படாதது ஏன்? அவர்கள் மீது நடவடிக்கை ஏதுமில்லையே ஏன்?
இதுவரை அரசு அலட்சியமாக இருந்ததை சுட்டிக் காட்டிய நீதிமன்றம், அரசுக்கு ஒரு தேதி குறிப்பிட்டு கெடு வைக்கலாம். மக்களுக்கு கெடு அதுவும் மிகக் குறுகிய காலக் கெடுவை வைப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் கவனத்தில் கொள்ளப்படாதது ஏன்?
மக்கள் மீது அக்கறை கொள்ளும் அரசாக இருந்திருந்தால், நீதிமன்றம் உத்தரவிட்ட போதே, காலக் கெடுவை நீடிக்க வேண்டுமென கோரியிருக்கலாமே? அக் காலக் கெடுவிற்குள் மக்களுக்கு இன்னமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கலாமே?
படிப்படியாக இவ்வுத்தரவை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் அமல்படுத்தச் சொல்லி, முதலில் அரசியல்வாதிகள்,அரசு ஊழியர்கள், காவல்துறையினர் கூடவே வழக்கறிஞர்கள் அதன்பின்னர் பொதுமக்களென விரிவு படுத்தியிருக்கலாமே?
மக்களுக்கு உதவி செய்தே ஆகவேண்டுமென அரசு உறுதி பூண்டிருந்தால்,
அம்மா குடி நீர், அம்மா மருந்தகம்,அம்மா உணவகம், அம்மா சிமென்ட் வரிசையில் அம்மா ஹெல்மெட் என குறைந்த விலையிலோ அல்லது விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்,ஆடு,மாடு வரிசையில் வழங்கியிருக்கலாமே?
-எல்லாம் நம்ம 'ஹெல்மெட்' எழுத்து!