5 Sept 2015

தனி ஒருவன்



பிப்ரவரி 2013 இல் தன் சகோதரன் ஜெயம் ரவியை வைத்து இயக்கப் போவதாக மோகன் ராஜா அறிவித்து,மெல்ல மெல்ல மெருகேற்றப்பட்டு வெளி வந்திருக்கும் படம்.

முதலில் அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ ப்ரசாத்திற்குப் பதில் 'ஹிப்ஹாப்' தமிழனின் இசை. மாற்றம் அவ்வளவே.

மித்ரன் (ஜெயம்ரவி) நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி. காவல்துறை பயிற்சியின் போதே தன் நெருங்கிய நண்பர்களோடு திருட்டுத் தனமாக வெளியேறி சமூக அவலங்களை தட்டிக் கேட்கும் கேரக்டர்.

சமுதாயத்தில் நிகழும் பெரிய தவறுகளுக்கெல்லாம் காரணம், சின்ன, சின்னத் தவறுகளும் அவற்றோடு தொடர்புடைய கும்பல்களும் தான் என நினைக்கிறார்.

எல்லா சிறிய தவறுகளும் ஒரு பெரிய அதிகார மையத்தின் கீழ்.

அது- அறிவாளிப் போர்வையில் வலம் வரும் அறிவியலாளர் சித்தார்த் (அரவிந்த்சாமி) தான் என்பதைக் கண்டறிகிறார்.

அதிகார மையத்தையும் அதன் கிளைகளையும் ஜெயம் ரவியால் என்ன செய்ய முடிகிறது என்பதில் சுபம்.

எழுத்தாளர் சுபாவோடு கைகோர்த்து இயக்குனர் மோகன்ராஜா எழுதிய திரைக்கதையிலும்,வசனத்திலும் தீ பறக்கிறது.

காட்சிக்குக் காட்சி 4G நெட் வேகப் பயணம்.

முதலமைச்சராக நாசர், அரவிந்த்சாமியின் காதலியாக பாலிவுட் நடிகை முக்தா கோட்ஸே (டப்பிங் சுசித்ரா?) ,

வில்லன் க்ரூப்பில் வம்சி கிருஷ்ணா என எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள்.

அரவிந்த்தின் தந்தையாகவும் அமைச்சராகவும் தடதடக்கும் தம்பிராமையா ஸ்க்ரீனில் தெரியும்போதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

அதுவும் தலையை தூக்கி,நெஞ்சை நிமிர்த்தும் காட்சிகளிலும், முழியை உருட்டி வார்த்தைகளை விழுங்கும் போதும் மனதில் நிறைகிறார்.

'மணிரத்ன' அர்விந்த்சாமி ஹாண்ட்சம் ஆச்சர்யம்!
பாட்ஷா பட பாணியில்,

"நீங்க தானே அர்விந்த்? 'ஃபாரின்ல நீங்க இத்தன நாள் என்ன செஞ்சிகிட்டு இருந்திங்க? " - என கத்திக் கேட்கத் தோன்றுகிறது.

கொஞ்சம் சதைபிடிப்பும், முகத்தில் சில மருக்களும் மட்டுமே மாற்றம். மற்றபடி அழகும், நடிப்பின் அம்சங்களும் அப்படியே ,ஓல்டு சிந்தால் சோப்பாய், தூக்கி அடிக்கிறது.

நயன்தாராவிற்கான க்ளோசப் காட்சிகள் அவருக்கெதிரான திட்டமிட்ட சதி போலிருக்கிறது. ..

.ப்ப்ப்ளீஸ் நயன்.

கமர்ஷியலுக்காக ஒரு காதல் பாடல் (டிவைஸ் மூலம் வில்லன் காதில் விழாமல்).

நயன்தாரா, ஜெயம்ரவியை காதலிப்பதாய் ப்ரொப்போஸ் செய்யும் போது,

'தப்பிச்சுடு.... '
-என ரசிகர்கள் கூவுவதும்,

பதிலுக்கு ஜெயம் ரவி,
'காதலிக்கும் எண்ணமில்லை '
-என்றதும்,,

'வெவரமானவண்டா' எனக் கத்தி, அதே ரசிகர்கள் ஆசுவாசமடைவதும் திரையரங்க வசனங்கள்.

முசோரி, ரிஷிகேச்,டெஹ்ராடூன்-என, படத்தின் முற்பாதியில் அழகை நிறைத்த கேமராமேன் ராம்ஜிக்கு நன்றி.

ஒளிப்பதிவில் மங்கள்யான் படத் தெளிவு.

ஒரு டைட்டில் சாங், ஒரு டூயட் சாங் மட்டுமே இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் நீளமாய்த் தோன்றுகிறது.

கோபிகிருஷ்ணா கச்சிதமாக கத்தரித்திருத்திருக்கிறார்(முற்பாதி ஃப்ளாஷ் பேக் முடியும் இடத்தில் மட்டும் சின்ன குழப்பம்).

க்ளைமாக்ஸில் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தில், கொலையுண்ட மணிமேகலையின் வாய்ஸை,எடிட் மற்றும் மிக்ஸிங் செய்து ரவி வழங்கியதை கோர்ட்டு அப்படியே ஏற்றுக் கொண்டது நம்பும்படி இல்லை.

ஜெயம் ரவியின் ரகசிய தகவல் தொழில் நுட்பம் நிறைந்த பாதுகாக்கப்பட்ட அறையில் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை என்பதையும் காமெடியில் சேர்க்கலாம்.

ரவியை அர்விந்த் அவ்வப்போது சந்தித்துப் போவது ரவிக்கு மட்டுமே தெரிவதால், இது ஆவி படமோ என அஞ்சத் தேவையில்லை.

எல்லாம் கிடக்கட்டும்.
'தனியொருவன் நினைத்தால், மனது வைத்தால், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் அவலங்களை தட்டிக் கேட்கவும், மாற்றவும் கொஞ்சமேனும் முடியும்'

-என்ற நம்பிக்கையை, சமீபத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கி வாட்ஸப்பில் அது பரவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி காவலர் விவகாரம் நிரூபித்தது.

அவ்வரிசையில் டெக்னாலஜி துணை கொண்டு நாமும் சில சமூக அவலங்களை அடக்கலாம் என்ற நம்பிக்கையை மேலும் விதைக்கிறது இப்படம்.

தற்போதைய ரிலீஸ்களில், 'தன்னிகரற்ற தனி ஒருவன்' இவன்.