5 Sept 2015

அரசுப் பள்ளிகளின் அசுர முன்னேற்றம்


அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இக்கல்வியாண்டில் ஒட்டு மொத்தமாக சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமாக மாணவ மாணவியர் சேர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் மனதில் இது வரவேற்கத்தக்க மாற்றமாக அமைந்துள்ளது.

இந்த மாற்றத்தை மக்களிடையே விதைத்து, நம்பிக்கையை உருவாக்க அரசும் அதன் நலத் திட்டங்களும் பெரிதும் உதவியாய் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அதே சமயத்தில் இந்த அதிசயத்தை சமுதாயத்தில் நிகழ்த்த பெரிதும் உதவியிருப்பது ஆசிரிய பெருமக்கள் தாம். குறிப்பாக போட்டி எழுத்துத் தேர்வின் வாயிலாக கடந்த 10 ஆண்டுகளாக நியமிக்கப்பட்டு வரும் இளைய தலைமுறையினர்.

மாணாக்கர்களின் மனதறிந்து அவர்களின் தேவையறிந்து அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு, தகவல் தொழி நுட்ப உதவியோடு பல்வேறு தகவல்களை திரட்டி மாணாக்கர்கள் முன் கொண்டு வந்து கொட்டி, அவர்களை ஆனந்தத்திற்குள் ஆழ்த்தி வருகிறார்கள்.

என்றாலும் இது ஒரு சிறு படியே.

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனத் தந்தைகளின் கனவுகளை சுக்கு நூறாக்க நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்.

ஆனால் நிச்சயமான நம்பிக்கை கீற்று ஒன்று மக்கள் மற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

சரி. இந்த நேர்மறையான மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல தடையாய் இருக்கும் காரணிகள் எவை என்பதை ஒவ்வொன்றாக நம் நண்பர்களின் முன்னெடுத்து வைக்கலாமா?

என்னுடைய முதல் கேள்வியும் பதிலும் நானே..

கேள்வி 1. அரசுப் பொதுத் தேர்வில் இன்னமும் சில அரசுப் பள்ளிகளின்- தேர்ச்சி சதவீதக் குறைவு, கற்றலில்,கற்றல் அடைவில் பின் தங்கிய நிலை, மாணவர் சேர்க்கை குறைவு -இவற்றிற்கு வெளிப்படையான காரணம் தான் என்ன? என்னதான் அங்கே சிக்கல்?

என் பதில்:

இது போன்ற பள்ளிகளுள்,பெரும்பாலானவற்றில் இந்நிலை நீடிக்கக் காரணம் அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 50% காரணமென்றால், 20% அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தான் காரணம். மீதம் 30% ???
(கவனிக்க... எல்லா பள்ளிகளையும் சொல்லவில்லை)

மாணவர்களை ஒரு போதும் குறை கூற முடியாது. சொல்லவும் கூடாது. சமுதாயத்திற்காகவும், மாணவர்களுக்காகவும் தான் பள்ளிகளே தவிர, ஆசிரியர்களுக்காக இல்லை.

எப்படி 50%, 20% மற்றும் 30% என்கிறீர்கள்? 30% யார்தான் பொறுப்பு? -பார்க்கலாம்.

"சமையற்கட்டின் சூடு பொறுக்க முடியாத சமையல்காரன், அச்சமையற்கட்டை விட்டு மட்டுமல்ல, அப்பணியையே விட்டுவிட்டு வெளியேறிவிட வேண்டியது தான்
"-இது மேலை நாட்டுப் பழமொழி.