18 Nov 2015

SCERT வழங்கும் ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி



தமிழகத்தில் எல்லா அரசுப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் ஒரு கணினியாவது உள்ளது.

ப்ரொஜெக்டரும் பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மடிக் கணி கூட உள்ளது.

ஆனால் இவற்றை பயன்படுத்துவதில் தான் சிக்கல் உள்ளது.

ஒன்று ஆசிரியர்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் முறையான பயிற்சி இல்லை.
அல்லது அதைப் பயன்படுத்துவதில் பயமோ தயக்கமோ உள்ளது.

கெட்டுப் போய்விடுமோ,
அப்படி ஆனால் என்ன செய்வது,எங்கு போய் நிற்பது, எந்த நிதியிலிருந்து அவற்றை சரி செய்வது என்பது போன்ற ஏராளமான கேள்விகள்.

என்னைப் பொருத்தவரை அதைப் பூட்டியே வைத்தால் சரி செய்யவே முடியாத அளவிற்கு வீணாகிவிடும் என்பதே எதார்த்தம்.

சில பள்ளிகளில் ELCOT வாயிலாக அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிறைய கணினிகள், செர்வர்கள், இன்வெர்ட்டர்கள் பயன்பாடின்றியும் பழுதடைந்து போயும் கிடக்கின்றன.

பல பள்ளிகளில் தங்களால் இயன்ற அளவிற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் SCERT வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கணினி இயக்கி அதன் வாயிலாக கற்பித்தல் மென் பொருட்களை பயன்படுத்தி அனைத்து பாடங்களையும் கற்பிப்பது எப்படி என்ற பயிற்சியினை அரசு வழங்கி வருகிறது.

இது கணினி வழி கற்றல் கற்பித்தலில் ஆர்வமுடைய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே.

இடைநிலை,பட்டதாரி,முது நிலை ஆகிய அனைத்து நிலைகளிலுமுள்ள ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்கான ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களை அந்தந்த மாவட்டங்களிலிருந்து SCERT மின்னஞ்சல் வாயிலாக தேர்ந்தெடுத்து தகவல் அனுப்பி விட்டது.

சராசரியாக 50 ஆசிரியர்கள் ஒரு மாவட்டத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

இதோ தஞ்சாவூரில் இன்று முடிய மூன்று நாட்கள் ஒரு கல்லூரியில் இப்பயிற்சி நடந்து வருகிறது.

ஆடுதுறை அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழியாக நிறுவனத்தின் முதல்வர் அவர்களின் அன்றாட வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமதி.காந்திமதி அவர்களின் மேற்பார்வையிலும், ஒருங்கிணைப்பிலும் இது சிறப்பாக நடந்தேறி வருகிறது.

கருத்தாளர்களாக திரு.ஆனந்த், திருமதி.சிலம்பரசி, திரு.சுரேஷ், திரு.ஹிதயத்துல்லா ஆகியோர் செயல்படுகின்றனர்.

இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு செயல்படுகின்றனர். கணினி இயக்குதலில் அடிப்படை முதல் Nhm Writer,Converter, Unicode, Auto collage, G mail account,Tamil wiki, Translation, Hot potato Software என அனைத்து வகுப்புகளிலும் அசத்துகின்றனர்.

இவை அனைத்திற்கும் SCERT யின் இயக்குனர் முனைவர்.இராமேஸ்வர முருகன் அவர்கள், பேராசிரியர்.ஆஸீர் , ஆசிரியர் மற்றும் மாநிலக் கருத்தாளர் திருமதி.உமா மகேஸ்வரி, விக்கிபீடியா எழுத்தாளர் திருமதி.பார்வதி உள்ளிட்ட குழுதான் முதற் காரணம்.

இரவு பகல் பாராது ஒரு குழுவாக இயங்கி சிறப்பாக திட்டமிட்டு மாவட்டங்களில் சிறந்த குழுக்களை உருவாக்கி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சியை கொண்டு சேர்ப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல.

உண்மையிலேயே இக்குழு முழு பாராட்டிற்குரியது.

அனைவரின் சார்பாக இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இப்பயிற்சியில் பங்கேற்கும் அன்பிற்கினியோரே!

இப்பயிற்சியோடு நம் செயல்பாடுகள் நின்றுவிடக் கூடாது. தொடர்ச்சியாக கற்ற அனைத்தையும் கற்றல்,கற்பித்தல் செயல்பாடுகளில் புகுத்த வேண்டும்.

குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை கருத்தாளர்களும்,பங்கேற்பாளர்களும் நேரில் சந்தித்து கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் இடர்பாடுகள் குறித்து கலந்துரையாட வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் கடமையை செவ்வனே செய்து வரும் அதேவேளையில் தங்களது திறனை மேலும் மெருகூட்டிக் கொள்ள வேண்டும் என நினைப்பதும், தொடர்ச்சியாக கற்க வேண்டும் என நினைப்பதும் ஒரு கடமையே.


ஆம்... கற்றல் என்பது ஆசிரியர்களின் கட்டாயக் கடமையாக இருக்கட்டும் கடைசி வரை...