9 Dec 2015

முனைவர் பட்டம் பெற்ற தருணம்



எண்ணிலடங்கா சூட்சுமங்களை தன்னகத்தே கொண்டு நம்மை நகர்த்தும் காலத்தின் ஒரு கடைசி மணல் துகளாகவே இருக்கிறேன் நான்.

நான் என்பதிங்கே அகங்காரமோ,ஆணவமோ அல்ல.
துகளின் துகளுக்குள்ளுறையும் ஒரு சிறு துகளின் ஆரம்பத்தைக் கண்டறிய முடிந்தால், அதன் அற்பப் புள்ளியாய் இருக்கும் அந்த நான்.

எங்கோ பிறந்து எப்படியெல்லாமோ வளர்ந்து கடவுளுக்கும்,கடிகாரச் சத்ததிற்கும் அடி பணிந்து அன்றாடம் ஓடிக் கொண்டேயிருப்பதில் இருக்கும் ஒரே சுகம் - கவலை கொள்ள காலமேயின்றி இருத்தல்.

1:50 பைசா பேருந்துக் கட்டணத்தில் கல்லூரி சென்று திரும்பி, மரங்களோடும், பறவைகளோடும் அதி அற்புதமாய் உலவும் அமைதியையும் சுகித்து நூலகம் சென்று உதவியாளர் அழகப்பனிடம் புத்தகங்கள் பெற்றது...

கல்லூரிப் பருவத்தின் முதல் நாளில் முதல் மாடியில் அறை எண் 53 இல் முதல் வகுப்பில் யாரும் வரும் முன்னரே சென்று அமர்ந்து அங்கே ஜன்னலோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பச்சைக் கிளிகளை ரசித்தது...

ஷேக்ஸ்பியராய் உருமி மிரட்டிய பேரா.செல்வராஜையும், மெர்சன்ட ஆப் வெனிசின் கிறிஸ்து தாஸையும், டேனியல் ஜோன்ஸை கண் முன் நிறுத்திய ஸ்ரீநிவாசனையும், நகைச்சுவையோடு நாவல்களை கற்பித்த ஜோஸப் பாண்டியனையும், கணேசனின் மெடாபிஸிகல் ஜான் டன் எக்ஸ்டஸியையும், ராமனின் மாடியூல்களையும், கற்பித்தலில் வீரமணியின் எளிமையும்,புதுமையும்,புன் முறுவலும் கற்பித்த பின்னான தேர்வுக்குத் தயாராக அள்ளித் தரும் குறிப்புகளும், சிவகுமாரின் தோழமையுடனான கற்பித்தலும்,காமெடிகளும் அவர் கூடவே வகுப்பிற்கு கூட்டி வரும் பரவசமும், சுந்தர்ராஜன் அவர்களின் தனிப்பட்ட அக்கறையும், ஐ.ஏ.எஸ். தான் உனக்கு சரிப்படுமென அன்போடு கூறிய ராதாகிருஷ்ணனும் கண்ணைக் கலங்க வைக்கிறார்கள்.

துறைக்கு முதலாவதாய் வரும் என்னை நம்பி சாவியை ஒப்படைத்து அமர்ந்து படிக்கச் சொன்ன மறைந்த அலுவலக உதவியாளர் வீரமணி, கனிவான தட்டச்சர் ரவி, ஆங்கிலத்தில் அடிப்படையிலிருந்து போதித்த பேரா.வி.ஆர்.அங்கப்பன், மொழிபெயர்ப்பு பணியை கற்க உதவிய ஜெர்மானியர் தாமஸ் மால்டன், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி நிறுவனத்தை வழி நடத்த முதலில் ஒப்படைத்த லண்டன் வழக்கறிஞர் ராஜ் மோகன், கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் கனகராஜ்,உதயக்குமார், பத்திரிக்கைத் துறையில் உதவிய ஜெயகிருஷ்ணன், சாகுல் அமீது,அரிமா,ஆரோ,சக்தி,ஒளிர்ஞர், கவிதைக்குக் காரணமான களப்பால் குமரன்,தா.சு.ராசேந்திரன், செல்ல.கணேசன்,கவிஞர்.வாசன்,முத்துக்குமார்-இப்படி ஒவ்வொன்று குறித்தும் ஒரு புத்தகம் எழுதக் கூடிய அளவிற்கு அனுபவங்களை சேகரித்து வைத்திருக்கிறேன்.

எங்கெங்கோ ஓடி எதையெல்லாமோ செய்ய வேண்டுமென நினைத்தாலும் கற்றலிலும்,கற்பித்தலிலுமான வேட்கை நின்றபாடில்லை.
என் முன்னோர் செய்த தவம், அவர்களின் ஏக்கம் என்னை மாணவனாகவே வாழ வழி செய்திருக்கிறது.

கற்றலும்,கற்பித்தலும் ஆங்கிலமென்றாலும் எங்கும் எதிலும் எப்போதும் என் தாய்மொழியை முன்னிறுத்துவதில் ஆனந்தம் மேலோங்குகிறது.

என் தலைமுறைக்கும்,என் தலைமுறையைத் தொடர்வோர்க்கும் கற்பித்தலில்,கற்றலில் புதுமையையும்,தொழி நுட்பத்தையும் புகுத்த வேண்டிய அளப்பரிய பணியை அரசு நம்பி அளித்திருக்கிறது.

பயிற்சிகள் வாயிலாக ஆசிரியர்களை மேலும் உத்வேகப் படுத்தும் சவாலான பொறுப்பும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.
செய்யும் கடமைக்கு கை நிறைய ஊதியத்தையும் அள்ளித் தருகிறது.

ஆங்கிலப் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு எழுதவும், சீர் செய்யவும் இந்த எளியவனுக்கு அரசு அளித்திருக்கும் அங்கீகாரமனைத்திற்கும் நான் குறிப்பிட்டுள்ளோரின் ஆசீர்வாதம் தான் காரணம்.

என் முடிவில்லா பயணங்களுக்கு வழித் துணையாகவும் சுமை தாங்கியாகவும், புன்னை மர நிழலாகவும் நண்பர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

நண்பர்கள், பயணங்கள்,புத்தகங்கள்-இம்மூன்றும் இல்லாமல் வாழ்தலென்பது எனக்கு எளிதல்ல. எல்லாம் வல்ல சாயி நாதனுக்கும், வேதமாதா காயத்ரி தேவிக்கும், பள்ளி வயதில் நான் துவண்டு தவித்த தருணங்களில் என்னை தட்டிக் கொடுத்து தூக்கிவிட்ட என் சிறு வயது நண்பர்களுக்கும் நான் இன்று பெற்ற பட்டத்தில் பெரும் பங்கு உண்டு.

அனைவருக்கும் என் மகிழ்வையும், நன்றிகளையும் சமர்ப்பிப்பதில் ஆனந்தமடைகிறேன்.