
அகராதியிலிருந்து வார்த்தைகள் உருவப் படும் ஒலி
உன்அசைக்க முடியா மௌனத்தில்.
உன் ஊமைமொழி தேசியமயமாக்கப்பட்டால்,
அந்நியமொழி ஆதிக்கம் என்ற
அறைகூவல் எழக்கூடும்.
தாய் மொழிக்கு நீ தரும் தண்டனை
மிகக் கொடியது.
காதைப் பிளக்கிறது
க,ங ,ச களின் கதறல் சப்தம்.
உன் பயன் பாடுகளின் தொய்வால்
ஆய்த எழுத்துக்கள்
அஹிம்சையை கடைபிடிக்கின்றன.
காத்திருக்கிறேன்-
இடைவெளிகளை இன்னும் அதிகப்படுத்து.
இடைவெளிகளை இன்னும் அதிகப்படுத்து.
நான் எதிரே வந்தால்
உன் பார்வைகளை
அரக்க பறக்க
அள்ளிச் சுருட்டு.
உன் தடுமாற்றங்களை தவிர்த்துக் கொள்ள
தரையூன்றி நட.
அவ்வப்போதுஆடைகளை சரி செய்து
என்னை அவமானப் படுத்து.
சாலையோர நண்பரிடம்
சகஜமாய் சிரித்து நட .
வெளி வரும் வார்த்தைகளை
வழித்துப் பூட்டிக்கொள் .
இன்னும் என்னென்னவோ செய் ....
-உன் மூச்சு மட்டுமாவது
லப் டப் புகளுடன்பேசிக் கொண்டிருக்கட்டும் .
- ஏனென்றால்,
அம் மொழியுள் தான் என் ஆயுளே அடங்கியிருக்கிறது .
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!