Showing posts with label என்னை செதுக்கியவர்கள். Show all posts
Showing posts with label என்னை செதுக்கியவர்கள். Show all posts

9 Dec 2015

முனைவர் பட்டம் பெற்ற தருணம்



எண்ணிலடங்கா சூட்சுமங்களை தன்னகத்தே கொண்டு நம்மை நகர்த்தும் காலத்தின் ஒரு கடைசி மணல் துகளாகவே இருக்கிறேன் நான்.

நான் என்பதிங்கே அகங்காரமோ,ஆணவமோ அல்ல.
துகளின் துகளுக்குள்ளுறையும் ஒரு சிறு துகளின் ஆரம்பத்தைக் கண்டறிய முடிந்தால், அதன் அற்பப் புள்ளியாய் இருக்கும் அந்த நான்.

எங்கோ பிறந்து எப்படியெல்லாமோ வளர்ந்து கடவுளுக்கும்,கடிகாரச் சத்ததிற்கும் அடி பணிந்து அன்றாடம் ஓடிக் கொண்டேயிருப்பதில் இருக்கும் ஒரே சுகம் - கவலை கொள்ள காலமேயின்றி இருத்தல்.

1:50 பைசா பேருந்துக் கட்டணத்தில் கல்லூரி சென்று திரும்பி, மரங்களோடும், பறவைகளோடும் அதி அற்புதமாய் உலவும் அமைதியையும் சுகித்து நூலகம் சென்று உதவியாளர் அழகப்பனிடம் புத்தகங்கள் பெற்றது...

கல்லூரிப் பருவத்தின் முதல் நாளில் முதல் மாடியில் அறை எண் 53 இல் முதல் வகுப்பில் யாரும் வரும் முன்னரே சென்று அமர்ந்து அங்கே ஜன்னலோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பச்சைக் கிளிகளை ரசித்தது...

ஷேக்ஸ்பியராய் உருமி மிரட்டிய பேரா.செல்வராஜையும், மெர்சன்ட ஆப் வெனிசின் கிறிஸ்து தாஸையும், டேனியல் ஜோன்ஸை கண் முன் நிறுத்திய ஸ்ரீநிவாசனையும், நகைச்சுவையோடு நாவல்களை கற்பித்த ஜோஸப் பாண்டியனையும், கணேசனின் மெடாபிஸிகல் ஜான் டன் எக்ஸ்டஸியையும், ராமனின் மாடியூல்களையும், கற்பித்தலில் வீரமணியின் எளிமையும்,புதுமையும்,புன் முறுவலும் கற்பித்த பின்னான தேர்வுக்குத் தயாராக அள்ளித் தரும் குறிப்புகளும், சிவகுமாரின் தோழமையுடனான கற்பித்தலும்,காமெடிகளும் அவர் கூடவே வகுப்பிற்கு கூட்டி வரும் பரவசமும், சுந்தர்ராஜன் அவர்களின் தனிப்பட்ட அக்கறையும், ஐ.ஏ.எஸ். தான் உனக்கு சரிப்படுமென அன்போடு கூறிய ராதாகிருஷ்ணனும் கண்ணைக் கலங்க வைக்கிறார்கள்.

துறைக்கு முதலாவதாய் வரும் என்னை நம்பி சாவியை ஒப்படைத்து அமர்ந்து படிக்கச் சொன்ன மறைந்த அலுவலக உதவியாளர் வீரமணி, கனிவான தட்டச்சர் ரவி, ஆங்கிலத்தில் அடிப்படையிலிருந்து போதித்த பேரா.வி.ஆர்.அங்கப்பன், மொழிபெயர்ப்பு பணியை கற்க உதவிய ஜெர்மானியர் தாமஸ் மால்டன், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி நிறுவனத்தை வழி நடத்த முதலில் ஒப்படைத்த லண்டன் வழக்கறிஞர் ராஜ் மோகன், கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் கனகராஜ்,உதயக்குமார், பத்திரிக்கைத் துறையில் உதவிய ஜெயகிருஷ்ணன், சாகுல் அமீது,அரிமா,ஆரோ,சக்தி,ஒளிர்ஞர், கவிதைக்குக் காரணமான களப்பால் குமரன்,தா.சு.ராசேந்திரன், செல்ல.கணேசன்,கவிஞர்.வாசன்,முத்துக்குமார்-இப்படி ஒவ்வொன்று குறித்தும் ஒரு புத்தகம் எழுதக் கூடிய அளவிற்கு அனுபவங்களை சேகரித்து வைத்திருக்கிறேன்.

எங்கெங்கோ ஓடி எதையெல்லாமோ செய்ய வேண்டுமென நினைத்தாலும் கற்றலிலும்,கற்பித்தலிலுமான வேட்கை நின்றபாடில்லை.
என் முன்னோர் செய்த தவம், அவர்களின் ஏக்கம் என்னை மாணவனாகவே வாழ வழி செய்திருக்கிறது.

கற்றலும்,கற்பித்தலும் ஆங்கிலமென்றாலும் எங்கும் எதிலும் எப்போதும் என் தாய்மொழியை முன்னிறுத்துவதில் ஆனந்தம் மேலோங்குகிறது.

என் தலைமுறைக்கும்,என் தலைமுறையைத் தொடர்வோர்க்கும் கற்பித்தலில்,கற்றலில் புதுமையையும்,தொழி நுட்பத்தையும் புகுத்த வேண்டிய அளப்பரிய பணியை அரசு நம்பி அளித்திருக்கிறது.

பயிற்சிகள் வாயிலாக ஆசிரியர்களை மேலும் உத்வேகப் படுத்தும் சவாலான பொறுப்பும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.
செய்யும் கடமைக்கு கை நிறைய ஊதியத்தையும் அள்ளித் தருகிறது.

ஆங்கிலப் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு எழுதவும், சீர் செய்யவும் இந்த எளியவனுக்கு அரசு அளித்திருக்கும் அங்கீகாரமனைத்திற்கும் நான் குறிப்பிட்டுள்ளோரின் ஆசீர்வாதம் தான் காரணம்.

என் முடிவில்லா பயணங்களுக்கு வழித் துணையாகவும் சுமை தாங்கியாகவும், புன்னை மர நிழலாகவும் நண்பர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

நண்பர்கள், பயணங்கள்,புத்தகங்கள்-இம்மூன்றும் இல்லாமல் வாழ்தலென்பது எனக்கு எளிதல்ல. எல்லாம் வல்ல சாயி நாதனுக்கும், வேதமாதா காயத்ரி தேவிக்கும், பள்ளி வயதில் நான் துவண்டு தவித்த தருணங்களில் என்னை தட்டிக் கொடுத்து தூக்கிவிட்ட என் சிறு வயது நண்பர்களுக்கும் நான் இன்று பெற்ற பட்டத்தில் பெரும் பங்கு உண்டு.

அனைவருக்கும் என் மகிழ்வையும், நன்றிகளையும் சமர்ப்பிப்பதில் ஆனந்தமடைகிறேன்.

7 Oct 2009

பேராசிரியர் B.R.வீரமணி அவர்கள்

போன பதிவுல என்னோட பேராசிரியர்கள் பத்தி சொல்றதா சொல்லிருந்தேன். அதுல ஒரு அய்யா பேராசிரியர் B.R.வீரமணி அவர்கள்.



இன்னும் நினைவிருக்கிறது... அது 1994 ஆம் ஆண்டு. நானும் என் நண்பர்கள் வெற்றிசெல்வன் [இப்போது வழக்கறிஞர்], குணாநிதி[இப்போது பேராசிரியர்] உட்பட நண்பர்கள் இளங்கலை முதலாமாண்டு ஆங்கில இலக்கியம் பயின்ற அப்பொழுது தான் அந்த கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியில் சேர்ந்திருந்தார். அமைதியான தோற்றம், கனிவான முகம், முகத்தில் எந்நேரமும் தவழும் புன்னகை- இவை தான் அன்னாரின் முகவரி.





மாணவர்களுக்கு கல்லூரியில் பேராசிரியர்களைக் கண்டாலே ஒரு வித பயம் வரும். ஆனால் இவரைக் கண்டால் சத்தியமாக பயம் வராது. பழகுவதில் அத்துணை இனிமையானவர் சார். இவரைக் கண்டால் பயம் இருக்காதே தவிர, மரியாதை கண்டிப்பாக இருக்கும். அதற்கு அதி முக்கிய காரணம் மொழிப் புலமையும், இலக்கியத்தில் நாட்டமும்.

மனசுல பட்ட விஷயங்கள பட பட ன்னு சொல்லிடுவேன்... நான் எப்பவும்...
எனக்கு தெரிஞ்ச வர இவங்கள பத்தி சொல்றேன் ..

  • சார் ரொம்ப சிம்பிள்... கொஞ்சம் கூட அவங்க வெளித் தோற்றத்திலும் , நடவடிக்கையிலும் ஆடம்பரமே பார்க்க முடியாது.
  • அதிகம் பேச மாட்டாங்க. பேச வேண்டிய நெலம வந்தா துப்பாக்கி தோட்டா மாதிரி வார்த்தைகள் வந்து விழும்.
  • ஆங்கிலத்துல எவளோ புலமையோ, அதே அளவுக்கு தமிழ்ல புலமை உள்ளவங்கன்றது யாருக்கு தெரியுமோ இல்லையோ எனக்கு நல்லா தெரியும். ஆங்கில இலக்கியம், கவிதைகள், கதைகள், புதினங்கள், கட்டுரைகள், புகழ் பெற்ற திரைப்படங்கள் எல்லாமே அய்யாவுக்கு அத்துப்படி. இதே அளவுக்கு தமிழ் ஆர்வம் இருக்குற ஒரு மனிதர நான் இதுவரைக்கும் பாக்கல. நீங்க எந்த டாபிக் ல பேசுனாலும் சார் தொடர்ந்து தகவல் குடுத்துக்கிட்டே இருப்பாங்க. அந்த காலத்து எழுத்தாளர் கல்கி லேர்ந்து நவீன எழுத்தாளர் ஜெய மோகன் வரைக்கும் அய்யாக்கு அத்துப் படி.
  • ஏதாவது புத்தகத்த வச்சு படிச்சுக்கிட்டே இருப்பாங்க.
  • பசங்கள என்கரேஜ் பண்ணிகிட்டே இருக்கிறது சாரோட ஸ்பெஷல்.
  • தனிப்பட்ட முறையில எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லிருக்காங்க. சொல்லிகிட்டே இருக்காங்க. அதுனால தான் நானும் இயங்கிகிட்டே இருக்கேன்.
  • இப்ப கூட ஆங்கில இலக்கியத்துல முனைவர் பட்டம் வாங்கிடனும் ன்னு முயற்சி செய்றேன். நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் சேர்ந்த 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நொடி வரைக்கும் என்னை மனிதனாக செதுக்கி வருவதில் முக்கியப் பங்கு அய்யாவுக்கு உண்டு.
  • ஐயாவினுடைய ஆங்கிலம் மற்றும் தமிழ் புலமைய இன்னும் யாரும் அந்த அளவிற்கு பயன் படுத்திக் கொள்ள வில்லை என்பது நிதர்சனமான உண்மை. சாரும் தன்னுடைய ஆற்றலை முழுமையா இன்னும் என்ன காரணமோ வெளி உலகத்துக்கு தெரியப் படுத்தாம இருக்காங்க. இதுனால இழப்பு அவங்களுக்கு இல்ல. இளைய தலைமுறைக்கு தான்...
சார் அவங்க அம்மா சமீபத்துல காலமானப்போ ரொம்ப கவலையா தெரிஞ்சாங்க. அதுக்கு முன்னாடி அவங்கள அப்டி பாத்தது இல்ல. ரொம்ப கோவமா இருக்குரப்பெல்லாம் பாத்துருக்கேன். கோவம் வந்துட்டா பேசாம இருந்துருவாங்க. ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு இருக்குங்க... 1994 ல சார நான் எப்டி பாத்தேனோ ... அப்டியே அதே மாதிரியே இன்னைக்கும் இருக்காங்க... தோற்றத்துல மட்டும் இல்லைங்க.. மத்தவங்க கிட்ட பழகுரதுளையும்.. இந்த காலத்துலயும் இப்டிலாம் கெடைக்கிறது அபூர்வம்ங்க...
இந்த போஸ்ட சார் பாக்குறது சந்தேகம் தாங்க. அவங்க ரொம்ப பிஸி நெஜம்மாவே. அவங்க படிக்கிரதுளையும் கிளாசுக்கு ப்ரிபேர் பண்றதுளையும் அதிக நேரம் போக்குவாங்க.. அது நல்லது தானுங்களே மானவாசுக்கு...
அய்யா அவங்க வேலைய பாக்கட்டும்... நீங்களும் என்னோட சேந்து அய்யாவோட உடம்பும் மனசும் நீண்ட நாள் நிம்மதியா ... திடகாத்திரமா இருக்கணும் அப்டின்னு வேண்டிக்கோங்க உங்க சாமிகிட்ட.. [சார்க்கு சாமி கும்பிடுறதே பிடிக்காது.. கும்பிட்டா விமர்சனம் பண்ணவும் மாட்டாங்க...]
அப்புறம்.. சாரோட நெருங்கிய நண்பர் சிவகுமார் அவர்கள். ஹா.. ஹா....ஹா.. அவங்கள நெனச்சாலே சிருப்புவருதுங்க.....சொல்றேன்...சொல்றேன்...