31 Mar 2016

தோழா

'ஊப்பிரி' என தெலுங்கிலும் , தமிழில் 'தோழா' எனவும் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் நடிக்க முன்னதாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு கால்ஷீட் சிக்கல், கோர்ட்டு,நஷ்டஈடு என்றெல்லாம் சுத்தி இறுதியில் அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்திக்கப்பட்டுள்ளார்.
இதே போல ஜூனியர் என்.டி.ராமராவ் நடிப்பதாக இருந்த ரோலில் கார்த்தி. இவரது முதல் நேரடி தெலுங்கு படம் இது.
பிரசாத் பொட்லூரி தயாரிப்பில்,வம்சியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் 65 கோடி!படம் வெளிவந்த முதல் இரண்டு நாட்களிலேயே 30 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனாம். நாகார்ஜூனாவையும்,கார்த்தியையும் படம் சுற்றி வருகிறது. தலை பாகத்தை மட்டுமே அசைக்க,பேச முடிந்த வீல்சேரிலேயே வாழ்க்கையை நகர்த்தும் கோடீஸ்வர நாகார்ஜுனாவை கவனித்துக் கொள்ளும் கவலையேதுமற்ற மிடில்க்ளாஸ் கார்த்தி. ஃப்ரெஞ்சில் வெளிவந்த ‘தி இன்டச்சபிள்ஸ்’ தான் படத்திற்கு மூலம். நாகர்ஜூனாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளில்லை. கார்த்தியும் போட்டி போட்டுக் கொண்டு கலக்கியிருக்கிறார். தன்னுடைய நிலை குறித்து நாகார்ஜுனா நினைத்து நொடித்துப் போவதும்,அவருக்கு தெரிந்தும் தெரியாமலும் கார்த்தி தேற்றுவதும் என கதையில் நம்மை அறியாமல் லயிக்க வைக்கிறார்கள். சண்டைகள் இல்லை.கற்பழிப்புக் காட்சிகள் இல்லை. இரட்டை தொனி வசனங்களில்லை. பாடல்கள் இரண்டோ மூன்றோ ஆனால் பின்னணி இசையளவிற்கு மனதில் நிற்கவில்லை (ஸாரி கோபிசுந்தர்). வினோத்தின் கேமரா, பாரீஸ்,லியான், பெல்க்ரேட் (இங்கு ஷூட் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம்) அழகாக சுற்றி வந்திருக்கிறது. கார் ரேஸ் காட்சிகளில் வேகம். அனுஷ்காவும்,ஸ்ரேயாவும் நட்புக்காக முக்கியமான ரோல்களில் வந்து போகிறார்கள். தமன்னா இன்னமும் தான் சினிபீல்டில் கதாநாயகியாக நீடித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கடின உழைப்பு’ என கூறிவிட்ட படியால் அந்த மெழுகு பொம்மை குறித்த விமர்சனம் ஏதுமில்லை. பிரகாஷ் ராஜ் நாகார்ஜுனாவின் வக்கீல் நண்பராக வருகிறார். இவரும் கார்த்தியும் வரும் காட்சிகளிலெல்லாம் சிரிசிரித்து கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம். படம் முழுக்க காமெடி வசனங்களை தூவியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கார்த்தி தனது குடும்பத்திற்கும்,நாகார்ஜூனாவுக்கும் இடையே போராடி நடத்தும் வாழ்க்கை ஒரு காவியம். கார்த்திக்கு நாகார்ஜூனா உதவும் காட்சிகள்-நாகர்ஜுனாவிற்கு கார்த்தி உதவும் காட்சிகளிலெல்லாம் ரசிகர்கள் கண்களில் கண்ணீர். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை அவர்களையும் நாம் சமுதாயத்தில் சமமாக மதித்து நடக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இயல்பான காட்சிகளோடு ஒரு படம் இதுவரை வந்ததில்லை. படத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு நபர் வசனகர்த்தா தஞ்சாவூர் ராஜூமுருகன். குக்கூ படத்திற்கு பிறகான அவரது இப்படத்தின் வசனங்கள் அத்தனையும் கோடையின் ஆலங்கட்டி மழை. சுள் சுள்ளென நம் முகத்திலும் முதுகிலும் வந்து அறைகின்றன வார்த்தைகள். பெண்களின் பேராதரவு பெற்ற கட்சிகள் தேர்தலில் தோற்றதில்லை. பெண்களின் பேராதரவு பெற்ற காட்சிகளை நிரம்பக் கொண்ட திரைப்படமும் தோற்றதில்லை. அந்த வகையில் ‘தோழா’ நிச்சயமாக ஒரு வெற்றிப்படம் தான். அனைவரும் தாராளமாகப் பார்க்கலாம்.

14 Mar 2016

பிச்சைக்காரன்



2006 ஆம் ஆண்டு ஜீவா,சந்தியா நடிப்பில் வெளிவந்த 'டிஷ்யூம்' படத்தை இயக்கிய சசி, அப்படத்திற்கு விஜய் ஆண்டனியை இசையமைக்கச் செய்திருந்தார்.
இப்போது சசி, தனது 'பிச்சைக்காரன்' படத்திற்காக விஜய் ஆண்டனியை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார். கதாநாயகி 'சட்னா' (அப்படியே சந்தியா மாதிரியே). ஹீரோயினுக்கு அழகா, மகிழினின்னு பேரு வச்சுருக்காங்க..
லேடீஸ் சென்ட்டிமென்ட் ரொம்பவே தூக்கலான படம்.
பணக்காரன் ஒருவன், பிச்சைக்காரனாக' கொஞ்ச நாட்களுக்கு நடிப்பதும், அந்த நடிப்புக் காலத்தினூடே ஆன காதலும்,சண்டையும்,சென்ட்டிமென்ட் சீன்களும்.
உஸ்ஸ்ஸ்...
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி கிராமத்துல இருக்குற 'எவர்வின்' ஸ்பின்னிங் மில்லுல கொஞ்சம் சூட்டிங். அப்பறம் சென்னை கொஞ்சம், பாண்டிச்சேரி கொஞ்சம்ன்னு..
பாட்டு ஒண்ணும் மனசுல நிக்கலன்றதுலேருந்தே விஜய் ஆண்டனி, இந்தப் படத்துல நடிப்புக்கு மட்டும் தான் மெனக்கெட்டுருக்காருன்னு தெரியுது.
(இன்னும் அதே மாதிரி தான் பாஸ் முக பாவம்லாம் இருக்கு. பாவம் பாஸ் நாங்க)
"பளார்..பளார்" வசனங்கள் நெறையா இருக்கு.(வசனகர்த்தா யாருன்னு நெனப்பில்ல ஸாரி.)
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணும்ல நடிச்ச பகவதி பெருமாள், ஆண்டனியோட ஃப்ரென்டா நடிச்சுருக்கார்.
பாட்டு ஒண்ணும் மனசுல நிக்கலன்றதுலேருந்தே விஜய் ஆண்டனி, இந்தப் படத்துல நடிப்புக்கு மட்டும் தான் மெனக்கெட்டுருக்காருன்னு தெரியுது.
பிச்சக்காரங்களா ஆண்டனியோட நடிச்சிருக்கவங்க அப்பப்ப அடிக்கிற லூட்டி செமையா இருக்கு.
பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லன்னாலும் தாராளமா, தைரியமா இந்தப் படத்த பாக்கலாம்.
நல்ல சென்ட்டிமென்ட்டோட கூடிய டைம்பாஸ்..
-பிச்சைக்காரன் நிச்சயமா வசூல்காரன் தான்.

11 Mar 2016

மனித உரிமை மீறலொன்று

 -வீடியோவை எடுத்தவருக்கு விவசாயிகளும், தன்னார்வ நிறுவனங்களும் பாராட்டு விழா நடத்த வேண்டிய நேரமிது.
"அவ்வளோ பெரிய ஆளாடா நீ?"
-என கேட்டவாறே டிராக்டரிலிருந்து கீழிறக்கி தஞ்சையைச் சார்ந்த அந்த விவசாயியை அடித்து இழுத்துச் செல்கிறார் காவல்துறையைச் சார்ந்த ஒருவர்.
சட்டத்திற்குப் புறம்பாக பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாங்கள் கொடுத்த தொகையை திரும்பப் பெற பல அராஜகமான உத்திகளைக் கையாளுகின்றன.
அன்றாடம் நிகழும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வைக் கொள்ளலாம்.
அதிலும் இவ்விவசாயி தான் செலுத்த வேண்டிய தவணைகளில்
8 தவணைகளுக்கு 6 தவணைகளை முறையாகச் செலுத்தியிருக்கிறார்.
அறுவடை முடிந்து மீதத்தைச் செலுத்தி விடுகிறேன் என்றும் கெஞ்சியிருக்கிறார்.
கடன் ஒன்றைப் பெற வரும் வாடிக்கையாளரை இன்முகத்தோடு வரவேற்று காபி,டீ,கூல்டிரிங்க்ஸ் என குளிப்பாட்டி, ஒரு லட்சம் கடன் தொகைக்கு ஓராயிரம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வழங்கும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து நடக்கின்றனவா என்றால் இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அவசரத் தேவைக்காக பணம் பெறும் சாமானியர்கள் தவணைகளை முறையாக செலுத்தா விடில் சொல்லொனாத மன உளைச்சல்களை சில நிதி நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன.
இவர்களது வட்டிக் கணக்கீட்டினை விளக்கச் சொன்னால், ஒரு பொருளாதார மேதையே மயக்கமடைந்து விழுந்துவிடுமளவிற்கு விளக்கங்களைச் சொல்வார்கள். மேலும் விபரம் கேட்டால், நாம் கையெழுத்து போட்டுக் கொடுத்த தாளை காண்பித்து மிரட்டுவார்கள்.
காவல்துறை இவர்களது சொல்படி நடக்கிறதா? இல்லை சட்டப்படி நடக்கிறதா என்பதை மக்களின் ஊடகமான வாட்சப் வீடியோ வெளிப்படுத்தியிருக்கிறது என்பதும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்விஷயத்தை கையிலெடுத்திருக்கிறது என்பதும், அது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது என்பதும் பாராட்டுக்குரிய விஷயம் தான்.
என்றாலும் இது இன்னொரு சாதாரண செய்தியாக கால ஓட்டத்தில், காலத்தின் காலடியில் சிதைந்து போய்விடக் கூடாது என சாமனியர்கள் எண்ணுகிறார்கள்.
தான் உழைத்து சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய சொந்த நகையை பொதுத் துறை வங்கியில் அடகு வைத்து 3000,7000, 12000 என கடன் வாங்கும் கிராமத்துக் கடைக்கோடித் தெருவில் கதவில்லா வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் பெயரை கதவு எண்ணோடு பத்திரிக்கைகளில் வெளியிடும் வங்கிகள், கோடி கோடியாக கடன் பெற்று திரும்பச் செலுத்தாத மல்லையா அவர்களை இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது இப்படி வெளியிட்டிருக்கிறதா?
இதற்கு சட்டத்தில் இடமுண்டா?
தண்டிக்கப்பட வேண்டியது கடன் பெற்றவரா? வழங்கியவரா?
அன்பார்ந்த விவசாயிகளே,ஏழைகளே,சாமானியர்களே!
கைக்காசைப் போட்டு ஒரு கேமரா செல்போனையும் அதில் வீடியோ எடுக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆங்காங்கே இருக்கும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பாலன்களை, 'வீரர்களாக' நீங்களும் உருவாக்கலாம்.

10 Dec 2015

சென்னை வெள்ளம்



அரசுப் பணியாக சென்னையில் நேற்று வரை 3 நாட்களாவது நான் இருந்திருக்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால் செல்ல இயலாமல் போய்விட்டது.
வராததற்காய் வருந்துகிறேன் சென்னையே..
என்னையே எனக்குக் காட்டிய நீ, இன்று உருக்குலைந்து போய் நிற்பதை நினைத்தாலே நிலைகுலைந்து போகிறேன் நான்.
சென்னை மக்களை நான் கண்டுணர்ந்தவன் என்ற வகையில் சொல்கிறேன். வீழ்ந்ததை விட பல மடங்கு எழுவார்கள். வியத்தகு வகையில் இன்னும் சில தினங்களில்.
அங்கே செல்ல முடியாவிட்டாலும் இங்கிருந்து என்னால் இயன்றவற்றை கடந்த மூன்று நாட்களாக சில குழுக்களுடன் இணைந்து செய்து வருகிறேன்.
இந்த மழை வெள்ளம் நம் மக்களுக்குச் சொல்ல வருவது என்ன?
>ஏரி,குளங்களை ஆக்கிரமிக்காதீர்கள்.அக்கிரமத்திற்குத் துணை போகாதீர்கள் என்றா?
>ஆண்டுக்கொருமுறை வடிகால்கள்,ஆறுகளை தூர்வாருங்கள் என்றா?
>பருவ நிலை மாறுகிறது என்றா?
>புவி வெப்பமயமாதல் என்றா? எல்நினோ என்றா?
>நகரங்களில் கட்டமைப்பு திட்டமிடுதல் முட்டாள்தனமாக உள்ளதென்றா?
-இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று உண்டு.
அது பேரிடர் மேலாண்மை.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி எத்தனையோ படிப்பினைகளை நமக்குச் சொல்லிப் போனது.
அதன் பிறகேனும் நாம் படித்திருக்க வேண்டும்.
அரசு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் பேரிடர் மேலாண்மையை ஒரு பாடமாக சேர்க்கவே 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
இது போன்ற அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்ள நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் களப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
கயிறுகளைக் கொண்டு உயிர்காக்கும் முடிச்சினை இடுவது எப்படி? தீ,வெள்ளம், நிலநடுக்கத்தின் போது மக்கள் தங்களைக் காத்துக் கொள்வது எப்படி? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?-என்பன போன்றவை அவ்வப்போது மக்களுக்கு தொலைக்காட்சி,திரையரங்குகளில் காட்டப்பட வேண்டும்.
கும்பகோணம் தீவிபத்து நடந்த பின் திடீரென நாம் அனைவரும் விழித்துக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, தீயணைக்கும் கருவி குறித்தெல்லாம் பேசினோம்.
இன்று பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் தீயணைப்புக் கருவி இருக்கும். ஆனால் அது எங்கிருக்கிறது என்றோ எப்படி இயக்குவது என்றோ தலைமையாசிரியருக்கு தெரிந்தாலே அது பெரிய விஷயம்.
சுனாமி வந்தது. கடற்கரையோர மாங்குரோவ் காடுகள் குறித்தும், தடுப்பு சுவர்கள் குறித்தும் அதிகம் பேசினோம். மறந்துவிட்டோம்.
-எதெதெற்கெல்லாமோ ஜப்பான்,சீனா மற்றும் மேலை நாடுகளை ஒப்பிட்டுப் பேசும் நாம், இவ்விஷயத்திலும் இனியாவது அக்கறை செலுத்த வேண்டும்.
இயற்கையை வெல்ல எதுவுமில்லை எனினும் அதனிடம் கற்க நிறைய உண்டு.அதில் முக்கியமான ஒன்று முன்னெச்சரிக்கை.

Time Pass Online இல் வந்த நம்ம மீம்ஸ்


தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அற்புதமான ELCOM திட்டம்



இது ஒரு புதிய பயணம்.
அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் ஒரு புதுமையை புகுத்தியுள்ளது அரசு.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்ப்பதற்காக, ELCOM (English Language Communication) என்றொரு திட்டம்.
முதற்கட்டமாக 10 மாவட்டங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆசிரியர்கள்.ஆக மொத்தம் 100 ஆசிரியர்கள்-அவர்களது 100 பள்ளிகள்.
ஒவ்வொருவருக்கும் டேப் மற்றும் ப்ளூடூத் வசதியுள்ள ஸ்பீக்கர்.
டேப் இல் இருக்கக் கூடிய அப்ளிகேஷனைப் பயன்படுத்தி சுமார் 40 மாணவர்களைக் கொண்ட வகுப்பிற்கு பாடம் நடத்த வேண்டும்.
முழுக்க முழுக்க ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தி பேச்சாற்றலை வளர்ப்பதற்கான திட்டமிது.
ஒவ்வொரு வாரமும் என்ன நடத்த வேண்டுமென திட்ட வல்லுனர்களால் வாட்ஸப் குழு வழியாக தகவல் அனுப்பப்படும்.
அதை நடத்திவிட்டு மாணவர்களின் செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்து அதே வாட்ஸப் குழுவில் பகிர வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
திட்டம் மேலும் மேலும் செழுமை படுத்தப்படும்.
படத்தில் என்னுடனிருக்கும் Dinesh Anand Muthu Raman RK Adaikkalamani Vaseekaran ஆகியோர் எங்கள் கடமையைத் தான் செய்து வருகிறோம்.
அதற்கொரு அங்கீகாரமாக அரசு இந்தப் பணியை நம்பிக்கையோடு வழங்கியுள்ளது.
அந்த நம்பிக்கையை காப்பாற்றவும், அரசுப் பள்ளி மாணவர்களை இன்னும் மிளிரச் செய்யவும் மேலும் மேலும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
என்னுடன் இத்திட்டத்தில் பயணிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக எம்மீது நம்பிக்கை கொண்ட அத்துணை பேருக்கும் நன்றி.
எமது லட்சியமும்,கடமையும் அரசுப் பள்ளி மாணவர்களை உலக அரங்கில் தலைநிமிரச் செய்வதே!

பிரபல எழுத்தாளர் முத்துராம்

பிரபல எழுத்தாளர் உங்களது படைப்புகளாலும், எண்ணங்களாலும் வளர்ந்த நாங்கள் உங்களிடம் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
உங்களது யூக்கோஸ்லோவாக்கியா, செக்கஸ்லோவாக்கியா மற்றும் வாக்கி டாக்கியா பதிவுகள் தான் என்னை மென்மேலும் படிக்கவும்,எழுதவும் ஊக்குவித்தன.
அதிலும் தங்களது 'இலங்கையில் இந்து மாக்கடல்'-என்ற புத்தகத்தின் 273 ஆவது பக்கத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள, கொசுக்கள் குறித்த அறிவியல் பூர்வமான விளக்கங்கள் பிரமிப்பின் உச்சா. ஸாரி உச்சம்..

நீங்கள் சினிமாவிற்கு நடிக்க வர வேண்டும் என்ற Muthuramalingam Subramanian Jayaraj Pandiyan Jaya Prabha போன்றோரின் கோரிக்கையை நிராகரித்தது, தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த பேரழிவு!
Hariharan Venkatraman அண்ணன் ஒரு கோடி ரூபாய் முதல் தவணையாக உங்கள் படத்திற்கு ஒதுக்க முன் வந்தும் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதது ஏகாதிபத்தியத்திற்கே ஏமாற்றமாய் போனது.
' நானும் ரவுடி தான்'-படத்தில் தாங்கள் நயனுடன் நடிக்காமல் போனதற்கு, விஜய் சேதுபதியுடனான தங்கள் நட்பே காரணம் என கேள்விபட்டபோது அதிர்ந்து போனேன்.
நயனுக்காக என் போன்றோர் பிடிக்காத கார போண்டாவையும் தின்ன தயாராக இருக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு மாமனிதரா? -என எல்லோரும் போற்றத் தக்க புண்ணியவானாய் வலம் வருகிறீர்கள்.
நீங்கள் நீடூழி வாழ, உங்கள் காதலி காதம்பரி சார்பாகவும், நீங்கள் காதலிக்கும் நீலாம்பரி சார்பாகவும் இப்பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
-ஆப்பி பொறந்த டே! தல... மென்மேலும் வாழ்வில் வளர வாழ்த்துகள்...