31 Mar 2016

தோழா

'ஊப்பிரி' என தெலுங்கிலும் , தமிழில் 'தோழா' எனவும் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் நடிக்க முன்னதாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு கால்ஷீட் சிக்கல், கோர்ட்டு,நஷ்டஈடு என்றெல்லாம் சுத்தி இறுதியில் அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்திக்கப்பட்டுள்ளார்.
இதே போல ஜூனியர் என்.டி.ராமராவ் நடிப்பதாக இருந்த ரோலில் கார்த்தி. இவரது முதல் நேரடி தெலுங்கு படம் இது.
பிரசாத் பொட்லூரி தயாரிப்பில்,வம்சியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் 65 கோடி!படம் வெளிவந்த முதல் இரண்டு நாட்களிலேயே 30 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனாம். நாகார்ஜூனாவையும்,கார்த்தியையும் படம் சுற்றி வருகிறது. தலை பாகத்தை மட்டுமே அசைக்க,பேச முடிந்த வீல்சேரிலேயே வாழ்க்கையை நகர்த்தும் கோடீஸ்வர நாகார்ஜுனாவை கவனித்துக் கொள்ளும் கவலையேதுமற்ற மிடில்க்ளாஸ் கார்த்தி. ஃப்ரெஞ்சில் வெளிவந்த ‘தி இன்டச்சபிள்ஸ்’ தான் படத்திற்கு மூலம். நாகர்ஜூனாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளில்லை. கார்த்தியும் போட்டி போட்டுக் கொண்டு கலக்கியிருக்கிறார். தன்னுடைய நிலை குறித்து நாகார்ஜுனா நினைத்து நொடித்துப் போவதும்,அவருக்கு தெரிந்தும் தெரியாமலும் கார்த்தி தேற்றுவதும் என கதையில் நம்மை அறியாமல் லயிக்க வைக்கிறார்கள். சண்டைகள் இல்லை.கற்பழிப்புக் காட்சிகள் இல்லை. இரட்டை தொனி வசனங்களில்லை. பாடல்கள் இரண்டோ மூன்றோ ஆனால் பின்னணி இசையளவிற்கு மனதில் நிற்கவில்லை (ஸாரி கோபிசுந்தர்). வினோத்தின் கேமரா, பாரீஸ்,லியான், பெல்க்ரேட் (இங்கு ஷூட் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம்) அழகாக சுற்றி வந்திருக்கிறது. கார் ரேஸ் காட்சிகளில் வேகம். அனுஷ்காவும்,ஸ்ரேயாவும் நட்புக்காக முக்கியமான ரோல்களில் வந்து போகிறார்கள். தமன்னா இன்னமும் தான் சினிபீல்டில் கதாநாயகியாக நீடித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கடின உழைப்பு’ என கூறிவிட்ட படியால் அந்த மெழுகு பொம்மை குறித்த விமர்சனம் ஏதுமில்லை. பிரகாஷ் ராஜ் நாகார்ஜுனாவின் வக்கீல் நண்பராக வருகிறார். இவரும் கார்த்தியும் வரும் காட்சிகளிலெல்லாம் சிரிசிரித்து கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம். படம் முழுக்க காமெடி வசனங்களை தூவியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கார்த்தி தனது குடும்பத்திற்கும்,நாகார்ஜூனாவுக்கும் இடையே போராடி நடத்தும் வாழ்க்கை ஒரு காவியம். கார்த்திக்கு நாகார்ஜூனா உதவும் காட்சிகள்-நாகர்ஜுனாவிற்கு கார்த்தி உதவும் காட்சிகளிலெல்லாம் ரசிகர்கள் கண்களில் கண்ணீர். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை அவர்களையும் நாம் சமுதாயத்தில் சமமாக மதித்து நடக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இயல்பான காட்சிகளோடு ஒரு படம் இதுவரை வந்ததில்லை. படத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு நபர் வசனகர்த்தா தஞ்சாவூர் ராஜூமுருகன். குக்கூ படத்திற்கு பிறகான அவரது இப்படத்தின் வசனங்கள் அத்தனையும் கோடையின் ஆலங்கட்டி மழை. சுள் சுள்ளென நம் முகத்திலும் முதுகிலும் வந்து அறைகின்றன வார்த்தைகள். பெண்களின் பேராதரவு பெற்ற கட்சிகள் தேர்தலில் தோற்றதில்லை. பெண்களின் பேராதரவு பெற்ற காட்சிகளை நிரம்பக் கொண்ட திரைப்படமும் தோற்றதில்லை. அந்த வகையில் ‘தோழா’ நிச்சயமாக ஒரு வெற்றிப்படம் தான். அனைவரும் தாராளமாகப் பார்க்கலாம்.