10 Dec 2015

சென்னை வெள்ளம்



அரசுப் பணியாக சென்னையில் நேற்று வரை 3 நாட்களாவது நான் இருந்திருக்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால் செல்ல இயலாமல் போய்விட்டது.
வராததற்காய் வருந்துகிறேன் சென்னையே..
என்னையே எனக்குக் காட்டிய நீ, இன்று உருக்குலைந்து போய் நிற்பதை நினைத்தாலே நிலைகுலைந்து போகிறேன் நான்.
சென்னை மக்களை நான் கண்டுணர்ந்தவன் என்ற வகையில் சொல்கிறேன். வீழ்ந்ததை விட பல மடங்கு எழுவார்கள். வியத்தகு வகையில் இன்னும் சில தினங்களில்.
அங்கே செல்ல முடியாவிட்டாலும் இங்கிருந்து என்னால் இயன்றவற்றை கடந்த மூன்று நாட்களாக சில குழுக்களுடன் இணைந்து செய்து வருகிறேன்.
இந்த மழை வெள்ளம் நம் மக்களுக்குச் சொல்ல வருவது என்ன?
>ஏரி,குளங்களை ஆக்கிரமிக்காதீர்கள்.அக்கிரமத்திற்குத் துணை போகாதீர்கள் என்றா?
>ஆண்டுக்கொருமுறை வடிகால்கள்,ஆறுகளை தூர்வாருங்கள் என்றா?
>பருவ நிலை மாறுகிறது என்றா?
>புவி வெப்பமயமாதல் என்றா? எல்நினோ என்றா?
>நகரங்களில் கட்டமைப்பு திட்டமிடுதல் முட்டாள்தனமாக உள்ளதென்றா?
-இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று உண்டு.
அது பேரிடர் மேலாண்மை.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி எத்தனையோ படிப்பினைகளை நமக்குச் சொல்லிப் போனது.
அதன் பிறகேனும் நாம் படித்திருக்க வேண்டும்.
அரசு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் பேரிடர் மேலாண்மையை ஒரு பாடமாக சேர்க்கவே 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
இது போன்ற அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்ள நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் களப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
கயிறுகளைக் கொண்டு உயிர்காக்கும் முடிச்சினை இடுவது எப்படி? தீ,வெள்ளம், நிலநடுக்கத்தின் போது மக்கள் தங்களைக் காத்துக் கொள்வது எப்படி? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?-என்பன போன்றவை அவ்வப்போது மக்களுக்கு தொலைக்காட்சி,திரையரங்குகளில் காட்டப்பட வேண்டும்.
கும்பகோணம் தீவிபத்து நடந்த பின் திடீரென நாம் அனைவரும் விழித்துக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, தீயணைக்கும் கருவி குறித்தெல்லாம் பேசினோம்.
இன்று பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் தீயணைப்புக் கருவி இருக்கும். ஆனால் அது எங்கிருக்கிறது என்றோ எப்படி இயக்குவது என்றோ தலைமையாசிரியருக்கு தெரிந்தாலே அது பெரிய விஷயம்.
சுனாமி வந்தது. கடற்கரையோர மாங்குரோவ் காடுகள் குறித்தும், தடுப்பு சுவர்கள் குறித்தும் அதிகம் பேசினோம். மறந்துவிட்டோம்.
-எதெதெற்கெல்லாமோ ஜப்பான்,சீனா மற்றும் மேலை நாடுகளை ஒப்பிட்டுப் பேசும் நாம், இவ்விஷயத்திலும் இனியாவது அக்கறை செலுத்த வேண்டும்.
இயற்கையை வெல்ல எதுவுமில்லை எனினும் அதனிடம் கற்க நிறைய உண்டு.அதில் முக்கியமான ஒன்று முன்னெச்சரிக்கை.