11 Mar 2016

மனித உரிமை மீறலொன்று

 -வீடியோவை எடுத்தவருக்கு விவசாயிகளும், தன்னார்வ நிறுவனங்களும் பாராட்டு விழா நடத்த வேண்டிய நேரமிது.
"அவ்வளோ பெரிய ஆளாடா நீ?"
-என கேட்டவாறே டிராக்டரிலிருந்து கீழிறக்கி தஞ்சையைச் சார்ந்த அந்த விவசாயியை அடித்து இழுத்துச் செல்கிறார் காவல்துறையைச் சார்ந்த ஒருவர்.
சட்டத்திற்குப் புறம்பாக பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாங்கள் கொடுத்த தொகையை திரும்பப் பெற பல அராஜகமான உத்திகளைக் கையாளுகின்றன.
அன்றாடம் நிகழும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வைக் கொள்ளலாம்.
அதிலும் இவ்விவசாயி தான் செலுத்த வேண்டிய தவணைகளில்
8 தவணைகளுக்கு 6 தவணைகளை முறையாகச் செலுத்தியிருக்கிறார்.
அறுவடை முடிந்து மீதத்தைச் செலுத்தி விடுகிறேன் என்றும் கெஞ்சியிருக்கிறார்.
கடன் ஒன்றைப் பெற வரும் வாடிக்கையாளரை இன்முகத்தோடு வரவேற்று காபி,டீ,கூல்டிரிங்க்ஸ் என குளிப்பாட்டி, ஒரு லட்சம் கடன் தொகைக்கு ஓராயிரம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வழங்கும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து நடக்கின்றனவா என்றால் இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அவசரத் தேவைக்காக பணம் பெறும் சாமானியர்கள் தவணைகளை முறையாக செலுத்தா விடில் சொல்லொனாத மன உளைச்சல்களை சில நிதி நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன.
இவர்களது வட்டிக் கணக்கீட்டினை விளக்கச் சொன்னால், ஒரு பொருளாதார மேதையே மயக்கமடைந்து விழுந்துவிடுமளவிற்கு விளக்கங்களைச் சொல்வார்கள். மேலும் விபரம் கேட்டால், நாம் கையெழுத்து போட்டுக் கொடுத்த தாளை காண்பித்து மிரட்டுவார்கள்.
காவல்துறை இவர்களது சொல்படி நடக்கிறதா? இல்லை சட்டப்படி நடக்கிறதா என்பதை மக்களின் ஊடகமான வாட்சப் வீடியோ வெளிப்படுத்தியிருக்கிறது என்பதும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்விஷயத்தை கையிலெடுத்திருக்கிறது என்பதும், அது நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருக்கிறது என்பதும் பாராட்டுக்குரிய விஷயம் தான்.
என்றாலும் இது இன்னொரு சாதாரண செய்தியாக கால ஓட்டத்தில், காலத்தின் காலடியில் சிதைந்து போய்விடக் கூடாது என சாமனியர்கள் எண்ணுகிறார்கள்.
தான் உழைத்து சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய சொந்த நகையை பொதுத் துறை வங்கியில் அடகு வைத்து 3000,7000, 12000 என கடன் வாங்கும் கிராமத்துக் கடைக்கோடித் தெருவில் கதவில்லா வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் பெயரை கதவு எண்ணோடு பத்திரிக்கைகளில் வெளியிடும் வங்கிகள், கோடி கோடியாக கடன் பெற்று திரும்பச் செலுத்தாத மல்லையா அவர்களை இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது இப்படி வெளியிட்டிருக்கிறதா?
இதற்கு சட்டத்தில் இடமுண்டா?
தண்டிக்கப்பட வேண்டியது கடன் பெற்றவரா? வழங்கியவரா?
அன்பார்ந்த விவசாயிகளே,ஏழைகளே,சாமானியர்களே!
கைக்காசைப் போட்டு ஒரு கேமரா செல்போனையும் அதில் வீடியோ எடுக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆங்காங்கே இருக்கும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பாலன்களை, 'வீரர்களாக' நீங்களும் உருவாக்கலாம்.