22 Jun 2009

நிகழாக் காலம்



இன்னும் நினைவிருக்கிறது...
நம் சந்திப்பிற்காய் நீ
வெட்டிப் போட்டுவிட்டு
வந்து நின்ற சம்பவங்கள்..


மணி அடிக்காத தொலை பேசியை
அள்ளிக் கொண்டு ஓடுவாய் .

பொருள் புரிந்த புத்தகங்களில்
உன் கரு விழி மட்டும் பதிப்பாய்.

பதட்டமாய் நான் நகம் கடித்தால்
நீ உன் விரல் துப்ப முற்படுவாய்.

நான் செய்யும் புதுமை கண்டு
உன் விழிகளின் திரை விரிப்பாய்.

ஆழம் தெரியா நினைவுக் குளத்துள்
அடிக்கடி மூழ்கிக் கொள்வாய்.

கண்ணாடி முன் வெகு நேரம் நின்று
உன் பிம்பத்தால் அதனை சூடேற்றுவாய்.

சந்திப்புகளின் சரியான நேரத்துக்கு முன்னரே
கடிகாரத்தை அவசரப் படுத்துவாய்.

தோய்த்து உடுத்திய ஆடையில்
இல்லாத கறைகளைத் தேடுவாய்.

கவலையால் முடி உதிர்வதாய் உன்
கூந்தல் அலங்காரத்திற்கு
காரணம் தேடிக் கொள்வாய்.

இறுதியாய்,
நம் சந்திப்பின் போது
எல்லாம் மறந்திருப்பாய்
என்னைப் போலவே.

No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!