
அவசரமாய்,ஆசையாய்,ஆழமாய்
ஓர் எண்ணம் என் அடிமனதில் ஓடிற்று.
என்னை முன்னும் பின்னுமாய்
முழுதாய் புரட்டிப் போட்ட
உன்னை உருவாக்க முனைந்தேன்.
சிக்காத வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளும்
மெதுவாய் ஊறும்
ஓடற்ற நத்தையின் உடலும் கொடுத்தேன்.
நீ என்ன பேசினாலும்
எனக்கு மழலைதான் என்ற போதிலும்
அக்கணமே பிறந்த
குயிலொன்றை கண்டெடுத்து
அதன் குரலை மொழியாய்
உனக்குள் வைத்தேன்.
நீண்ட கோடை முடியும் வரை
நிதானமாய் காத்திருந்து
நிலம் வீழும் மழைத் துளிகள்
கரம் நீட்டி சேகரித்து
நீ பார்க்க நாம் பார்க்க
வலிக்காமல் விழி படைத்தேன்.
உனதென்ன எனதென்ன
உயிரென்றும் ஒன்றுதானே?
உறங்குவேன் உனக்குயிர் கொடுக்க,
எடுத்துப் பொருத்துவது யார்?- சொல்லிவிடு.
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!