10 Oct 2009

எண்ணித் துணிக வளர்ச்சி ...






மரங்களுக்கடியில் சங்கடங்கள் சலசலக்கும்.

முக்கியப் பாத்திரத்தை பாலித்தீன் பை ஏற்றுநடிக்க

செயற்கை நாடகமொன்று

செலவில்லாமல் அரங்கேறுகிறது.


நாகரிகம் என்ற பேரில் நிர்வாணத்தை நோக்கி நகரும் ஆடைகள்-

எம் டிவியிலும், அடல்ட்ஸ் ஒன்லியிலும்.


தொலைக்காட்சிகளில்

ஆபாசக் காட்சிகளை

அரசாங்கம்

உன்னிப்பாக கவனித்து வருகிறது- செய்தி.


வீட்டில் வளரும் நாய்களுக்கு

விருந்தாளிகளுக்கும்

விரோதிகளுக்கும்

வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.


காலிங் பெல்கள்கண்ணீர் விட்டன-

கதவுகள் தட்டப் படுவது,கம்ப்யூட்டர் சுட்டிகளால்...


ஈ மெயில் தபால்காரர் எந்த வீட்டில் தண்ணீர் கேட்பார்?

தண்ணீர்த் தளம் ஏதேனும் தனியே இருக்குமோ?


துக்கங்கள் கூட

தொலைபேசியில் அழ படுகையில்

வந்தாலும் வரலாம்

இணையத்தில் ஈமைக்கிரியை.


அன்டார்டிகாவின் தலை மேல்

அளக்க முடியா ஓசோன் சொட்டை.

-இயற்கை பிரிட்ஜின் தலையில் எந்தத் தைலம் தேய்க்கலாம்?


க்ளோனிங் முறையில்

கார்பன் காப்பிகளை வடிக்கத் தெரிந்த நீ,

எச் ஐ வீ என்றால்

எட்ட நிற்பதேன்?


மரபணுச்சோதனைகளால்

மரணம் கொல்லப் படும்போது

மயானக் கொல்லைகளெல்லாம்

மியூசியங்கள் ஆகுமோ?


மனிதர்களும், டினோசர்களும்

சமகாலத்தைய மிருகங்கள்!-

ஆதாம் இரண்டின் ஆராய்ச்சி கூறலாம்.


நேரெதிர் பலன்களையும்

பூமி ஒப்புக்கொள்ளும்போது

நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்

-சுருங்கி வருவது பூமி மட்டுமல்ல,

மனித மனமும் தான்.



No comments:

Post a Comment

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!