
சந்தர்ப்பம் புரியாமல்
வந்திடுகின்றன சந்தர்ப்பங்கள்.
சந்தர்ப்பங்களுக்கு ஆழங்களை விட
அவசரங்களேஅதிகம்.
கண் சிமிட்டுதலுடனோ
தும்முதலுடனோ
அல்லது வேறு எந்த
அனிச்சை செயலுடனோ
ஒப்பிட முடியாதவொன்று
சந்தர்ப்பம்.
காலத் தாயின்
கணத்திலும் கணத்தில் பிறந்த
லேசான குழந்தை சந்தர்ப்பம்.
ஒரு நீண்ட அமைதிக்கும்
வரையறுக்கப் படா
ஆனந்தத்திற்கும் இடையிலான
மெலிதான இழை சந்தர்ப்பம்.
கணவன்
மனைவி
குழந்தை
நண்பன்
மரணம்
- சந்தர்ப்பங்களில் வாய்க்கும்
சந்தர்ப்பவாதிகள் இவர்கள்.
துன்பக் கிணற்றை
தூர் வாரிப் பார்ப்பதும்
இன்பக் கடலிறங்கி
முத்தெடுக்க முனைவதும்
வெறி
வெற்றி
கோபம்
கொலை
காதல்
கண்ணீர்
என்றெல்லாம்
சடுகுடு ஆடிப் பார்ப்பதும்
சந்தர்ப்பத்தின் சலனப் புத்தி.
நடப்பில் இருந்தும்
கிழித்துப் போட முடியாத
கௌரவ குடும்ப அட்டை
சந்தர்ப்பம்.
-பயனற்றுப் போனாலும்
பாதுகாத்துத் தான் ஆக வேண்டும் .
சந்தர்ப்பங்களுக்கு
வேறு சில பெயர்களுமுண்டு.
அதை சந்தர்ப்பங்கள் வரும் பொழுது
சந்தர்ப்பமே சொல்லும்.
No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!