3 Jan 2010

நிலா காலம்..



ஆனந்தம், ஆர்ப்பாட்டங்களனைத்தையும்
பறி கொடுத்து
வெறிச்சோடி நிற்கும்
சற்றுமுன் முடிந்த
திருவிழா நான்..

வீசியெறியப்பட்ட தனிமையில்
இறைந்து கிடக்கும் குப்பைகளுடன்
பேசித் தீர்க்கிறேன்
மௌனத்தால்..

என் அசரீரிகளின்
அந்தப்புரம் அமர்ந்து
அவ்வப்போது குரல் கொடுக்கிறாய் நீ.

என் பெருத்த அழுகைகளின்
ஆதிக்குரல் வளையை
அசைத்துப் பார்க்கிறது
உன் கடிவாளம்.

உன்பெருமூச்சுகளில்
கொடி கட்டிப் பறக்கின்றன
என் கனவுத் துப்பட்டாக்கள்..

என் விழி ஈரம் துடைக்க முன் வந்தும்
இறுக மூடிக் கொண்டதால்
வியர்த்துப் போயின
உன் உள்ளங்கைகள்..

நம்மால் நாம் புறக்கணிக்கப் பட்ட பொழுதுகளில்
அகப்பட்டுக் கொண்டது காதல்.

ஆயிரமிருன்தென்ன..
மீண்டும் கிடைக்கவா போகிறோம்
நான் தேடிய நீயும்
நீ கண்டெடுத்த நானும்?

2 comments:

  1. படம் ஒன்றே போதுமே... படத்தை கவிதையாய் தேடியிருப்பார் போல.

    ReplyDelete
  2. நன்றி திரு. ஜெயசெல்வன் அவர்களே ! தொடர்ந்து இவ் வலை தளத்தை பாருங்கள். பின்னூட்டமிடுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

    ReplyDelete

தங்களது மேலான கருத்திற்கு நன்றி!