
தமிழக அரசு எதிர் வரும் 2010 ஜூன் முதல் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பின்பற்ற வேண்டிய சமச்சீர் கல்வி அடிப்படையிலான பாடப் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் State Board, Matric, Anglo Indian மற்றும் Oriental என்று பல்வேறு வித பாடத் திட்டங்கள் நடை முறையில் உள்ளன. இது மாணவர்களின் கல்வி மற்றும் தேர்ச்சி முறையில் பலவித குழப்பங்களையும் பாதிப்புகளையும் உண்டாக்குவதாக பெரும்பாலான கல்வியாளர்களும் உளவியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இவற்றை களைந்து ஒரே மாதிரியான பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறை தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற பெரும்பாலானோரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, சிறந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினரை அமைத்து, வரும் கல்வியாண்டிற்காக 1 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.
A4 அளவு தாளில் பல வண்ணங்களில், நிறைய தேவையான அளவு படங்களுடனும், ஆங்காங்கே விளக்க குறிப்புகளுடனும் வெளிவந்திருக்கும் இப் பாடப் புத்தகங்கள் வரவேற்கப்பட வேண்டியன.
வெறுமனே வாக்கியங்களுடனோ, முந்தைய முறையிலான கருப்பு வெள்ளை நிறத்திலோ புத்தகங்கள் இல்லாதது மட்டுமல்லாமல், புத்தகங்கள் படைப்பாற்றல் கல்வி முறையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
கிராமப் புற மற்றும் நகர்புற மாணவர்கள் அனைவரும் மனநிறைவு கொள்ளத்தக்க வகையில் புத்தகங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் புத்தகங்களை மாணவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியாக சுமை என்று கருதிவிடாத அளவுக்கு அமைந்திருப்பது கண்கூடு.
இனி ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடவாரியாக தனியார் தயாரித்து கடைகளில் விற்கப்படும் குறிப்பேடுகள் (Notes) விற்பனையின்றி போகும் அளவிற்கு மிக எளிமையாக ஆசிரியர், மாணவர் இருதரப்பினரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் இருப்பதால் பெற்றோர்கள் நிம்மதிப் பெரு மூச்சு விடலாம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் பாடப் புத்தகங்கள் அனைவர் கையிலும் கிடைக்கும் பொழுது வழக்கம் போல தனியார் பள்ளி நிறுவனங்கள் இந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை குறைகூறலாம். எந்த ஒரு புதிய செயலுக்கும் விமர்சனங்கள் எழுவது இயல்பு தான் என்று கூறி இவர்களது விமர்சனங்களை ஒதுக்கி விடாது, தமிழக அரசும் புத்தகங்களின் தரத்தை மேலும் மேம்படுத்த முன்வரும் என்று முழுமனதுடன் நம்புவோம்.
சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு கொண்டுவர பல்வேறு சட்ட ரீதியான சவால்களையும், அரசியல் ரீதியான சச்சரவுகளையும் திறம்பட சமாளித்து செயல்படும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்களையும் அரசின் உத்தரவினை ஏற்று அல்லும் பகலும் பல வேலைகளில் உணவு, உறக்கம் தொலைத்து புத்தகங்கள் குறித்த நேரத்தில் வெளிவர அயராது உழைத்த பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள், பேராசிரிய, ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் பாராட்டுவோம்.

No comments:
Post a Comment
தங்களது மேலான கருத்திற்கு நன்றி!