14 Jul 2011

ஜூலை-15-கல்வி வளர்ச்சி நாள்

காட்டுக்கு ராஜா உண்டு.
நாட்டுக்கும் ராஜா உண்டு.
கல்விக்கு உண்டா என நினைக்க,
கண் முன் வந்தார் காமராசர்!

தர்மம் தலை காக்குமென்ற
நம் முன்னோரின் வாக்கையொட்டி,
கர்மம் கலை காக்குமென
கடவுள் நமக்களித்த
கர்ம வீரர் காமராசர்!

பதவி துறந்து
பகட்டு மறந்து
சிங்கமாய் வலம் வந்த
கிங் மேக்கர் காமராசர்!

எதிர்காலத்துக்காய்
எல்லோரும் பொருளைப் பங்கிட,
ஏழ்மையில் பங்கு கொண்டார்
ஏழைப் பங்காளன் காமராசர்!

மெத்தப் படித்தோரெல்லாம்
மமதையில் சுற்றித் திரிய,
ஆறாம் வகுப்போடு அறவே நின்றாலும்-தம்
அனுபவத்தால் அறிவை வென்றார்
ஆற்றல் மிகு காமராசர்!

மொட்டு வெடித்து மலராத
பூ உண்டோ? தெரியாது.
படிக்காத மேதை-இப்
பாரினில் யாரென்றால்
பட்டென வந்து விழும்
பாட்டன் பேர் காமராசர்!

காட்சிக்கு எளியோன்
கருத்துக்கு இனியோன்
சாட்சிக்கு யாருமுண்டோ?
-சட்டெனச் சொல் காமராசர்!

பிற்பட்ட மக்களுக்காய்
முற்பட்டு சிந்தித்தோன்!

விருது நகர் செய்த தவம்,
நமக்களித்த
விருது தான் காமராசர்!

செவிக்கு உணவில்லாத போது
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுமென்ற
வாக்கை மாற்றி,
பசித்த வயிறு பாடம் கேட்குமா? எனக் கேட்டு,
முத்தான ஒரு திட்டம்
சத்துணவைக் கொண்டு வந்தோன்!

சகலரும் கல்வி பெற
சத்துணவைத் தந்ததனால்,
சமச்சீர் கல்விக்கு-அன்றே
சக்கரத்தை சுழலவிட்ட
சாமானியன் காமராசர்!

ஒவ்வொரு பருக்கையிலும்
உன் பெயரே இருப்பதனால்-இனி
எவ்வொரு நிலையினிலும்
எம்முயிர் நீ காமராசா!