8 Dec 2012

7/12/12 காவிரி டெல்டா முழு அடைப்பு



மாட்டுக்கு வைக்க இல்ல 
மனுஷனுக்கு கஞ்சி இல்ல ....

மண்ணுக்குள்ள வெதச்சேன் நான்
கண்ணுக்குழி நெறையுதடா ...

ஆயுசுக்கும் நானிருக்கேன்
அத்தன பேர் சொன்னீய ...

அதத் தாரேன் இதத் தாரேன் 

அம்புட்டுப் பேர் அளந்தீய ...

அடுப்படிக்கு வந்தீய 
அடிக்காலத் தொட்டீய ...

அளவில்லாம நம்புனோமே
அழுக வரவில்லையா ...

தாலி அடகு வச்சேன் 
தங்கத் தோடு அடகு வச்சேன் ..

அவ கழுத்தைப் பாக்கையில 
அவமானம் தாங்கலியே...

நட்ட பயிரெல்லாம் 
நாள் கடந்து வாடுதய்யா ..

சாதி தெரியல்லியா 
சதி செய்யத் தெரியல்லியா ...

கட்சித் தெரியல்லியா 
கர வேட்டிக் கட்டலிய்யா ..

யான கட்டிப் போரடிச்சான் 
பாட்டேன் முப்பாட்டேன் ...

யார நான் கேக்க 
யாரப் போயி நான் பாக்க...

சோத்த  நீ பாக்க 
ஆத்த நான் பாத்தேன் ...

வரப்புல கால வச்சு 
வலிக்காம நடந்து பாரேன் ...
முள்ளு கால் கிழிச்சா 
மொனகாம நடந்து பாரேன்..

நாத்த நான் தொலைச்சா 
நாறிப் போகும் ஒம் பொழப்பு..
தேருல போற நீயி 
தெருவுக்கு வந்துருவ...

சாபம் இல்லேடா 
சபதமும் இல்லேடா ...
சத்தியமா சொல்லுதேன்- எஞ் 
சாமி கேக்குண்டா !