1 Dec 2012

இயற்கையோடு இணைந்த வாழ்வுதான் இன்பம் நிறைந்ததாகும்








 சரித்திரம் உங்களை யானைகள்
என்றே சொல்லும்.

தேனீக்கள் இப்பொழுது கூடு கட்டுவது இல்லை

மொட்டுக்கள் மொட்டுக்களாகவே
உதிர்ந்திடுகின்றன

 வண்ணத்துப் பூச்சிகளின் முதுகில்
வள்ளையடிக்கப்பட்டு விட்டது.

  எனக்குப் பயமாயிருக்கிறது
இயற்கையோடு இணையாமல்
செயற்கைத்தனமாய் சுழன்று கொண்டிருக்கும்
மனிதர்களின் துன்பம் கண்டு.

மனிதர்களே!
குடிக்கும் தண்ணீர் தனை
பிடித்து விற்கும் பிழைப்புமுண்டு உங்களிடம்.

 புகைக்காதோரும்
புகைத்துத் தான் ஆக வேண்டும்- காற்றின் கட்டாயம்.

ஆக்ஸிஜன் நிறம் மாறிவிட்டது.
கரியமில  வாயுவுடன் 
அதற்குக் கலப்புத் திருமணம்.
- தீயற்ற புகைமூட்ட சாட்சியாய்.

 காடுகளெல்லாம்
நாடு கடத்தப்பட்டதால்,
வன விலங்கெல்லாம்
சினம் கொண்ட பின்னே
செய்வதறியாது திகைக்கப் போகும்
மாக்கள் கூட்டமே!

 மிஞ்சப் போவது
மரங்களா? மனிதர்களா?
- இயற்கையின் பட்டிமன்றம்
இன்னமும் தொடர்கிறது.
எச்சரிக்கையாய் இருங்கள் மனிதர்களே!

அண்டார்ட்டிக்கின் தலை மேல்
அளக்க முடியா ஓசோன் சொட்டை.
இயற்கை பிரிட்ஜின் தலையில்
எந்தத் தைலம் தேய்க்கலாம்?

செழித்த வயல்களெல்லாம்
கொழித்த வீடுகளாய் கொண்டு,
கடிகாரச் சத்தங்களை
கன்னத்தில் அப்பி,
கட்டிட நரகங்களுக்கிடையே
கசகசப்புகளாய் நடை போடும் மனிதா!

குயிலின் கூவல்களை
சி.டி.க்கள் சிலிர்க்க வைக்குமா?

செவிட்டுக் கரையிடம்
சொன்னதையே திரும்பத் திரும்ப
அலைகளால் அறைந்து கொண்டிருக்கும்
கடலின் இனிமை
வேறெங்கு உனக்குக் கிடைத்துவிடப் போகிறது?

 வளைக்கும்,
அலைக்குமிடையே
ஓயாமல் சடுகுடு ஆடி
சொந்தங்களைக் குழைத்தெடுக்கும்
நண்டுகளைப் பார்!

முற்றும் துறந்த முனிவர்களாய்
முத்துக்களைத் துறந்துவிட்டு,
தண்ணீர்த் திவலைகளுடன்
தன்னிறைவு பெறுகின்ற மீன்களைப் பார்!

பாய்ந்து முடித்திட்ட களைப்பில்
தன் மர உடம்பை
மண் மீது கிடத்தி
மகிழ்ச்சியாய் இளைப்பாறும்
பாய்மரங்களைப் பார்!

நீ நாகரிகப் போர்வையில்
உடை உடுத்தத் தொடங்க
இந்தப் பூமி நிர்வாணமானது மனிதா!

வருண தேவன் கட்சிக்குக்
கொடியாய்ப் போன வானவில்.

பூமிக் கண்ணாடியில்
முகம் பார்க்க எண்ணி,
மூக்குடை படுகின்ற மழைத் துளி!

நட்சத்திர சீர் சுமந்து,
நிலவினைப் பெண் கேட்டு வரும்
அந்தி மாலை!

வரப் போகும் சடத்திற்கும்
ஓயாமல் பால் சுரக்கும்
இடுகாட்டு எருக்கன் செடி!
- இவையனைத்தும்
இயற்கை தன்னுள் வைத்திருக்கும்
  இன்பங்கள் மனிதா!

  பூமியை விட வேகமாய்ச் சுற்றும் நீ,
எங்கே போய்விடப் போகிறாய்?

நாட்களனைத்தும்
பூமியின் குழுந்தைகள்.

அந்தி மாலையும்,
வைகறைப் பொழுதும்
பூமித் தாயின் பிரசவ நேரங்கள்.

அவள் தன் குழந்தைகளை வளர்த்தெடுக்க
வருத்திக் கொள்ளும் முறைதான்
தன்னைத் தானே தினமும் சுற்றல்.

நாள் என்பது ஆணா? பெண்ணா?

ஆண் பகல்
பெண் இரவு

ஆண் சூரியன்
பெண் நிலா

அவள் பெற்றெடுத்த காலங்களை
விதவிதமான வண்ணங்களில்
கரங்களில் கட்டிக் கொண்டு அலையும் மனிதா!

 இயற்கையை ரசி
இயற்கையை சுகி
இயற்கையாய் வாழ்
இன்பத்தை அள்ளிக் குடி
இறுதி வரை மகிழ்ச்சியாய் இரு.

  பாலிதீன் பைகளை
சரசரக்க விடாதே.

காடுகளை அழிப்பதிலேயே உன்
கவனமிருந்தால்
பாலைவனம் காண நீ சுற்றுலா செல்ல வேண்டாம்
- உன் சன்னல் வழி பார் சஹாரா தொச்யும்.

உன் வீட்டுக் கண்ணாடியில் இனி
குருவிகளல்ல
விட்டில் பூச்சிகள் கூட மோதாது.

ஆகவே தான் சொல்லுகிறேன் மனிதா!
இயற்கையை உன்
வாழ்வுக்கு வழி மொழி!
உன் வாழ்வில் உருண்டோடி
வந்து விழும் இன்பம்!